பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 203.)
`அவன் அருகில் இருப்பது பெண்மையின் சமீபம் மட்டுமல்ல. அழகின் அருகாமை, ஒருவித என்னவென்று அறியாத இன்பம் - அது காமத்தின் எழுச்சி அல்ல, ஆனால் இன வேறுபாட்டின் ஈர்ப்பு - அதன் தனித்துவம் உடற்சேர்க்கையில் கலந்து, படிப்படியாக அதிகரித்து, உயரிய நிலையை அடைந்து அதே கணத்தில் அடங்கிவிடும் கடல் பொங்குதல் அல்ல இந்த தனித்துவம். அதற்கும் அப்பாற்பட்டது - நீரோடையின் நித்திய சலசலப்பு தணிந்து எரியும் வெம்மை - அவ்வெம்மையில் அருள் கொழிக்கும் ஒளி... (பக்:76) இப்படியே நீளும் கவித்துவ நடையில் சிறுகதைகளுக்குப் புதிய பரிமாணத்தை தந்து, `நமது சுற்றுப்புறச் சூழலிலே அதைச் சார்ந்து வாழவில்லை என்றாலே அதற்கு ஹிம்சை செய்வது போலத்தான்' (பக்.146) என்று அகிம்சைக்குப் புதிய கருத்தைக் கையாண்டு,
ஒரு இந்தியனின் சொல்லொண்ணாப் பேறு, அவன் இந்தியனாகப் பிறந்திருக்கிறான் என்பது மட்டுமன்று அவன் காந்தி பிறந்த நாட்டைச் சேர்ந்தவன் என்பதும் தான் என்பதை அமெரிக்கப் பெண் மூலம் உணர்த்தும் கருத்தாழமும், கண்ணியமான, சமுதாயப் பொறுப்புணர்வுள்ள கதை மாந்தர்களைப் படைத்துள்ளதன் மூலமும் நரசய்யாவின் சிறுகதைகள் வலுவாய் உள்ளன.
கடற்படையில் பொறியாளராக இருந்து கொண்டு, சிறுகதைகளின் தரம் சரிந்து வரும் இந்நாளில், ஆத்மார்த்தமாக அவர் படைத்துள்ள இச்சிறுகதைகள் இலக்கியத்துக்குக் கிடைத்த வரப்பிரசாதம். வெவ்வேறு காலக்கட்டங்களில் யதார்த்தமாகவும், நயமாகவும் எழுதப்பட்ட 21 சிறுகதைகளும் வாசகர்களை வசப்படுத்தும், வரவேற்பைப் பெறும் என்பதில் ஐயமில்லை. உலக அனுபவமிக்க எழுத்தாளர் நரசய்யாவின் அற்புத சிருஷ்டி, அருமையான தொகுப்பு நூல் இது.