கோயிற் களஞ்சியம், 6, நிர்மலா நகர், தஞ்சாவூர்- 613 007.(பக்கம்: 510)
தமிழகக் கோயில்கள் தமிழ்ப் பண்பாட்டின் கருவூலங்கள். தமிழர் தம் கலையுணர்வு, நாகரிகம், கடவுள் பக்தி இவற்றின் சின்னமாக, பழமையான
கோயில்கள் விளங்குகின்றன. இத்தகு கோயில்களின் கோபுரங்களே மனிதனுக்கு முகம் போல மிக மிக இன்றியமையாதன. இந்த கோபுரங்களின் கலை
அம்சங்களையும், கட்டடக் கலை நுட்பத்தையும் இந்நூல் படங்களுடன் தெளிவாக விளக்குகிறது.
செங்கல், சசுசதை, மரம், உலோகங்களால் எடுக்கப்பட்ட `மண்டளி' கோயில் சோழர் காலத்தவை. கருங்கல்லால் எடுக்கப்பட்ட `கற்றளி' கோயில்கள்
1400 ஆண்டுகளுக்கு முன் பல்லவர்களால் அமைக்கப் பெற்றவை.
பண்டைக்கால சமுதாயக் கூடங்களாக விளங்கிய கோயிலின் கோபுரங்கள் பல வரலாற்றுச் செய்திகளைச் சொல்வதை இந்நூல் துல்லியமாக
சான்றுகளுடன் விளக்குகிறது.2300 ஆண்டுகளுக்கு முன்பே கோயிலும், கோபுரங்களும் தோற்றம் பெற்றன. 1000 ஆண்டுகளுக்கு முன் ராஜராஜன்
கட்டிய தஞ்சை கோயிலும் கோபுரமும் வரலாற்று அதிசயமாகப் போற்றப்படுகின்றன.
திருவண்ணாமலைக் கோபுரத்திலிருந்து அருணகிரிநாதர் வீழ்ந்ததும்; மதுரை கோபுரத்திலிருந்து கி.பி.1710ம் ஆண்டில் விஜயரகுநாத நாயக்கரின்
வரிச்சுமை அதிகரித்ததையும், வறட்சி, பஞ்சத்தால் மக்கள் அல்லற்படுவதையும் உணர்த்த கோயில் ஊழியர் கோபுரத்திலிருந்து விழுந்து இறந்ததையும்
கல்வெட்டின் ஆதாரத்துடன் இந்நூல் விளக்குகிறது. தில்லை நடராஜர் கோயிலில் கி.பி.1597ல் கோவிந்தராஜப் பெருமாளுக்குத் தனி கோயில்
கட்டுவதை எதிர்த்து 20 தீட்சிதர் தில்லை கோபுரம் ஏறி விழுந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தென்காசி கோயிலில் கி.பி.1463ல் கோபுரத்தை பராக்கிரம
பாண்டியன் கட்டி அதைப் பாதுகாக்க வேண்டிய ஒரு அழகிய கல்வெட்டும் வெட்டிய சுவையான செய்திகள் படிப்போரை வியப்பில் ஆழ்த்துகின்றன.
திருக்கழுக்குன்றம், திருவரங்கம், மதுரை போன்ற கோபுரங்களின் சிறப்புக்களையும், சிற்ப அழகுகளையும், வரலாற்றுச் செய்திகளையும்,
ஓவியங்களையும் விரிவாக இந்நூலில் காணலாம்.
400 ஆண்டுகளுக்கு முன் மாலிக்காபூர் தமிழகத்தில் படையெடுத்து ஷ்ரீரங்கம், மதுரை கோயில்களைக் கொள்ளையடித்து, தீ வைத்து, சிற்பங்களைச்
சிதைத்ததை அமீர்குஸ்ரு மூலம் வரலாறு கூறுவதைப் படிப்பவரின் உள்ளம் கொதிக்கும்.
5, 9, 13 என அடுக்குகளாக அமைக்கப்பட்டுள்ள கோபுரங்கள், ஐந்து வகையான கோபுர அமைப்புகள் போன்ற இந்நூலில் உள்ள அரிய பல
செய்திகளைப் படிப்பவர் உள்ளம், கோபுரமாய் நிச்சயம் நிமிரும்! கட்டடக் கலைக்குப் பெருமை சேர்க்கும் அற்புத நூல்.