இது பக்தி நூலா என்று கேட்டால், ஆம்; பக்தி நூல்தான். மகாவிஷ்ணு மேற்கொண்ட அவதாரங்களின் நோக்கத்தையும் பெருமையையும் சுவைபடச் சொல்கிறது. சரி, இன்றைய நம் வாழ்வுக்கும் பயன்படும் ஒரு வழிகாட்டி நூலா என்று கேட்டால், ஆம்; அப்படிப்பட்டதுதான்! அந்த அவதாரங்கள் தற்போதைய நடைமுறை வாழ்க்கைக்கு எதை உணர்த்துகின்றன என்ற தளத்தில் நின்று இந்நூல் ஓங்கி ஒலிக்கிறது. காலங்காலமாக நவராத்திரி படிக்கட்டுகளில் அடுக்கிவைப்பது மட்டுமேயல்லாமல், ஒருமுறை இந்த நூலுக்குள்ளும் நுழைந்து வருவோம். ஒரு வித்தியாசத்துக்காக - கடைசி அவதாரமான கலியுக கல்கி அவதாரம், புத்தகத்தில் முதலில் இடம்பெறுகிறது. காரணம், நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் காலமல்லவா! நூலாசிரியர் கே.ஆர்.ஸ்ரீநிவாச ராகவன், இருபது வருடங்களுக்கும் மேலாக தன் பேனாவில் பக்தி ரசத்தை நிரப்பி எழுதி வருபவர். அவரது விறுவிறு நடையே இதை உங்களுக்கு உணர்த்தும்.