தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்., 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-98. போன்: 2625 1968. (பக்கம்: 376). இந்திய திருநாட்டில் இயற்றப்படும் எல்லா சட்டங்களுக்கும் தாய்ச் சட்டம் இந்திய அரசியலமைப்புச் சட்டமேயாகும். பிற சட்டங்கள் இச்சட்டத்தின் சாராம்சம் எனலாம்.
இந்நூலின் ஆசிரியர் முன்னுரையில் கூறியது போல மக்களுக்காகப் படைக்கப்பட்ட சட்டம். மக்களால் படிக்க முடியாமல் போனால், அந்தச் சட்டம் இயற்றப்படுவதால் பொதுமக்களுக்கு என்ன பயன் இருக்க முடியும்? என்ற கேள்வி எழுப்பி அதற்கு விடை காணும் பொருட்டு மற்ற சட்டங்களுக்கெல்லாம் மூலச் சட்டமாக விளங்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எளிய, இனிய தமிழில் தந்துள்ளார் .
இந்திய அரசியலமைப்புச் சட்டமானது இரண்டு பெரும் பிரிவுகளை உள்ளடக்கியது.
இந்நூலின் ஆசிரியர் "உறுபுகள்' என்ற தமிழ் பதத்தை ஆங்கில வார்த்தையான ARTICLES என்பதற்கு இணையாக பயன்படுத்தியுள்ளார். இந்திய அரசியலமைப்பு சட்டமானது 395 உறுபுகளைக் கொண்டது. புதிதாக இணைக்கப்பட்டுள்ள உறுபுகளுக்கும் இந்நூலின் ஆசிரியர் தமிழாக்கம் செய்துள்ளார். (உதாரணம் - உறுபு 338-அ) அதேசமயத்தில் 1976ம் வருடத்திய 42வது அரசியல் திருத்தச் சட்டத்தால் புகுத்தப்பட்ட உறுபு 39-அ விற்கான தமிழாக்கம் இந்நூலில் காணப் பெறவில்லை.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் பல மாற்றங்களை இதுநாள் வரை கண்டுள்ளது. அதற்கு ஏற்றார்போல இந்நூலிலும் நீக்கப்பட்டதையும், பிற்சேர்க்கைகளையும் ஆசிரியர் எளிய தமிழில் எழுதியுள்ளார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை தமிழில் தருவது என்பது முடியாத விஷயம். இதில் வெற்றி கண்டுள்ள ஆசிரியர் பாராட்டுக்குரியவர்.
பொதுமக்களுக்கும், சட்டக் கல்லூரி மாணவர்களுக்கும், இளம் வழக்கறிஞர்களுக்கும் இந்நூல் சிறந்த வழிகாட்டி.