கண்ணதாசன் பதிப்பகம், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 132. விலை: ரூ.50).
ஆரிஸன் ஸ்வெட் மார்டன் எழுதியுள்ள "ஸக்ஸஸ் நக்கட்ஸ்' என்ற ஆங்கில நூலின் தமிழாக்கம் இந்நூல். வெற்றி இலக்கை எட்ட எதிர்மறையாக தவிர்க்க வேண்டியவை 16 தலைப்புகளிலும் நேர்மறை ஆலோசனைகளாக ஆய்வுகளாக 18 தலைப்புகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. வழக்கமாக தரப்படும் தலைப்பு எண். முறையாக சொல்ல வரும் விஷயங்களின் அணிவகுப்பு, தொடர்புடைய தலைப்புகள் அடுத்தடுத்து இடம் பெறுதல் என்ற எந்த விதிகளையும் ஆசிரியர் பின்பற்றவில்லை. குறள் போல பல இடங்களிலும், ஆத்திச்சூடி விளக்கமாக ஒரு வழியிலும் பல இடங்களில் கூற வரும் கருத்து குதி போட்டு வருகிறது. பலர் விரும்ப, மிகப் பிரபலமாக என்ன செய்ய? (பக்.29, 77), வாய்ப்பு எங்கே (பக்.37), வாய்ப்பு இல்லையா (பக்.8), வாய்ப்பை உருவாக்கு (பக்.103), அதிர்ஷ்டத்தை தவற விட்டவர் யார் யார் (பக்.14), வாய்ப்புகள் யாருக்கு வாய்க்காது (பக்.23) என்பவை காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள சொல்லப்படும் அறிவுரை. நூல் விஷயங்களை அட்டவணை இட்டு பொருள் ரீதியாக அழகுற கோர்த்து இருக்கலாம். புதுமை என நினைத்து அனுபவம் அப்படியே பிரகடனம் ஆகி விட்டதோ?
புறம் பேசுவதை... வெட்டி வேலை செய்வதை... முணுமுணுப்பதை... நேரத்தை வீணடிப்பதை... விதி உங்களுக்கு எதிராக உள்ளது என்று சொல்வதை... காலத்தை குற்றம் சொல்வதை... எதிர்காலத்தில் தீமையே விளையும் என்று எதிர்பார்ப்பதை... முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு சுற்றுவதை... குறை காண்பது, தொணதொணப்பது... கவலைப்படுவது இவற்றை.... காரணம் இல்லாமல் கோபம் கொள்வதை... செய்து கொண்டிருக்கும் வேலையைப் பற்றிக் குறை சொல்வதை... பெரிய பேச்சுப் பேசிக் கொண்டே சிறிய செயல்களைச் செய்வதை... சின்ன விஷயங்களுக்கெல்லாம் திட்டிக் கொண்டும், கோபப்பட்டுக் கொண்டும் இருப்பதை... உங்களால் செய்ய முடிந்ததை செய்யாமல் அதைப் பற்றி டம்பமடித்துக் கொண்டிருப்பதை... வாழ்க்கை மிகவும் சலிப்பூட்டுவது, வாழத் தகுதியற்றது என்று எண்ணுவதை... உங்களையே குறைவாக மதிப்பிடுவதை... உங்கள் திறமைகளை லேசாகக் கருதுவதை... நண்பர்களையும், தெரிந்தவர்களையும் பற்றி மோசமாகப் பேசுவதை... கடந்த காலத்தைப் பற்றி புலம்புவதையும், விரும்பத்தகாத அனுபவங்களை விடாமல் பிடித்துக் கொண்டிருப்பதையும்... விட்டொழியுங்கள்.புதைத்து விடுங்கள். சிந்திக்கத் தூண்டும் இந்த வரிகளைத் தியானியுங்கள்- உங்கள் வாழ்க்கைப் பயணம் வெற்றிகரமாகும்.