விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
நாம் அன்றாடம் தமிழிலேயே பேசுகிறோம்; தமிழிலேயே சிந்திக்கிறோம். எங்கே போனாலும் தமிழைக் கேட்டும் பேசியும் வருவதால் பிறர் பேசும் தமிழை எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது.
ஆனால், ஆங்கிலம் பேசும்போதும் எழுதும்போதும் தவறாகிவிடுமோ என்று ஒரு தயக்கம் ஏற்பட்டுவிடுகிறது. நம்மில் அனேகர் தமிழில் பேசும்போதும், ஆங்கிலச் சொற்களையே அதிகம் பயன்படுத்துகிறோம். இரண்டு மொழிகளையும் கலந்து பேசிப் பழகும் நமக்கு, தனி ஆங்கிலத்தில் பேசுவதற்கும் எழுதுவதற்கும் தயக்கம் அதிகமாக இருக்கிறது. காரணம், இலக்கணப் பிழை ஏற்பட்டு, கேட்பவர் கேலி பேசக்கூடாதே என்று நினைப்பதுதான்!
இப்படிப்பட்டவர்கள், பிழையின்றி ஆங்கிலம் பேசுவதற்கும் எழுதுவதற்கும் வசதியாக ஆங்கில இலக்கணத்தை இந்த நூலில் எளிமைப்படுத்திக் கொடுத்திருக்கிறார் நூலாசிரியர் டாக்டர் ஆர்.ராஜகோபாலன். ஒவ்வொரு வாக்கியத்தையும் உபயோகப்படுத்தும் விதம் மற்றும் அதன் ஆங்கில விளக்கங்கள் அனைத்தும் தெளிவான தமிழில் தரப்பட்டுள்ளன. ஆங்கில மாதிரி வாக்கியங்கள் அமைக்கப்பட்டு, அதற்கு தமிழ் வாக்கியங்களில் மொழிபெயர்ப்பும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஓரளவு ஆங்கிலம் அறிந்த சிலர் பயன்படுத்தும் ஆங்கில வாக்கியங்களில் ஏற்படும் சிற்சில பிழைகளை சுட்டிக்காட்டி, அவற்றை பயன்படுத்தும்போது ஏற்படும் பொருள் சிதைவையும் விளக்குகிறார் நூலாசிரியர். தற்போது பயன்படுத்தப்படும் ஆங்கில சொற்றொடர்களை உதாரணமாகக் காட்டி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்க ஆங்கில மொழிகளில் கையாளப்படும் வித்தியாசங்களையும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
ஆங்கில மொழியை ஓரளவு அறிந்தவர்களுக்கும், கற்க விரும்பும் எல்லோருக்கும் இந்த நூல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.