விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
சுற்றம் சூழ சிரித்துக் கொண்டும், பல்வேறு இயற்கைக் காட்சிகளை ரசித்துக் கொண்டும் சுற்றுலா செல்வது, ஓர் இனிய அனுபவம்தான்! அதுவே பள்ளி, கல்லூரிக் காலத்தில் என்றால்...? உள்ளத்தில் நீங்கா இடம் பெற்று என்றென்றும், மனத்தில் அசைபோடும் சுகானுபவத்தைத் தரும்! காரணம் நண்பர்கள், ஆசிரியர்கள் புடைசூழ, கவலைகள் ஏதுமற்று, இயற்கையையும் சூழலையும் ரசிக்கும் மனப்பக்குவத்தோடு செல்லும் பருவம் அது என்பதுதான்!
அப்படி, இந்த நூலில் மாணவர் பட்டாளத்தோடு ஆசிரியர் குழுவும் இன்பச் சுற்றுலா செல்கிறது. மாணவர்கள் பலவிதமான கேள்விகளை எழுப்புகிறார்கள். அதற்கு பேராசிரியர் பொறுமையோடு விளக்கங்கள் அளிக்கிறார். அவர் அளிக்கும் விளக்கங்கள், அந்த மாணவர்களுக்கு மட்டும் தேவைப்படுபவை அல்ல, வாசகர் பலருக்குமானவை. மாணவர் பட்டாளம் அடிக்கும் நகைச்சுவை கலாட்டாக்கள், உடலுக்கு மிகத் தேவையான கசப்பு மருந்தை இனிப்பு தடவிக் கொடுக்கும் சூட்சுமம்தான்!
பேராசிரியராக கு.ஞானசம்பந்தன். மாணவர் பட்டாளமாக கடிகருப்பு, அனுஷா, சினிமா சீனு உள்ளிட்ட கதாபாத்திரங்கள். கூடவே வழிப்போக்கர்களாக அறிஞர்கள் பாத்திரம் வேறு! இவர்கள் கூட்டணியில் தமிழ் இலக்கியச் செய்திகளும் சினிமா செய்திகளும் சிற்றாறும் மணிமுத்தாறும் கலந்து பிரவாகமெடுக்கும் தாமிரபரணியாக நூலில் பரிமளிக்கின்றன.
சுவாரசியமாகப் பல்வேறு செய்திகளைப் படிக்க நூலாசிரியர் கையாண்டிருக்கும் இந்த உத்தி, வாசகர்களுக்குப் புதிதானது, உற்சாகம் தரவல்லது.