விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
பச்சிளம் குழந்தையை வளர்ப்பதில் சில சிரமங்கள் என்றால், நடைபயிலும் குழந்தையை வளர்ப்பதில் வேறு சில சிரமங்கள் உண்டு. நிலைமையைப் புரிந்துகொள்ளாமல் இவர்கள் அடம்பிடிக்கும்போது கொஞ்சம் அதட்டி, உருட்டி பணியவைத்து விடலாம்.
ஆனால், மேற்சொன்ன இரு வகையானவர்களையும் வளர்ப்பதில் இல்லாத புது மாதிரி சிரமங்கள் டீன் ஏஜ் பருவத்தினர் வளரும்போது இருக்கின்றன. விஷயங்களை அவர்களுக்கு ஊட்டுவதில்லை; பரிமாறிக்கொள்கிறோம். அவ்வாறு பரிமாறிக்கொள்ளும்போது பெரியவர்களுக்கே கூச்சமும், பயமும் ஏற்படும். எவ்வளவுதான் மறைத்தாலும் அந்தக் கூச்சத்தையும் பயத்தையும் கண்டு அரும்புகள் உள்ளத்தில் மிரள்கின்றனர், தடுமாறுகின்றனர்.
டீன் ஏஜ் பருவத்தினரை இலக்காகக் கொண்டு டாக்டர் என்.கங்கா, எழுதியிருக்கும் இந்த நூலில், டீன் ஏஜ் பருவத்தைக் கடக்கும்போது, அவர்களுக்கு மன ரீதியாக எழும் அவஸ்தைகள், உடலில் ஏற்படும் மாற்றங்கள், உடல் உபாதைகள் ஆகியவற்றையும், அவற்றை சரி செய்துகொள்ளும் வழிகளையும் விவரித்துள்ளார். வருமுன் காக்கும் சில யுக்திகளையும் தெரிவித்துள்ளார்.
டீன் ஏஜ் பருவத்தினர் மீது எப்போதும் குற்றம் சுமத்திக் கொண்டிருப்பவர்கள், அவர்களுடைய மன சஞ்சலங்களைப் புரிந்துகொள்ளத் தவறி விடுகிறார்கள் என்பதை இந்த நூலில் தகுந்த உதாரணங்களுடன் விளக்கியுள்ளார். எந்தக் கண்ணோட்டத்தில் அவர்களைப் பார்க்கவேண்டும், அவர்களை எப்படிப் புரிந்து கொள்ளவேண்டும், எவ்வாறு ஆதரவாக நடந்துகொள்ளவேண்டும் என்பதும் இந்த நூலில் விவரிக்கப்பட்டுள்ளன.
நான் வளர்கிறேனே அம்மா! என்று டீன் ஏஜ் பருவத்தினர் சொல்லும்போது, கொஞ்சம் பெரியவர்களும் வளரவேண்டுமே அம்மா! என்ற பஞ்ச்சும் அதில் தெரிகிறது.
டீன் ஏஜ் பருவத்தினர் மட்டுமல்லாது, அவர்களை எப்படி அணுக வேண்டும் என்று பெரியவர்களுக்கும் சொல்லும் பயனுள்ள நூல் இது.