விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
உடலிலுள்ள உறுப்புகளின் ஆரோக்கிய நிலையே சிறந்த வாழ்வை அளிக்கும். பொருள் தேடி அலைகின்ற வாழ்வில் மனதிலும் உடலிலும் சுகவீனம் அடைந்த மனிதர்கள் ஏராளம். அவர்கள் தங்கள் உடலைப் பராமரித்துப் பாதுகாக்க நேரமின்றி வாழ்கின்றனர். உடல், மனம், ஆன்மா ஆகியவற்றின் செயல்பாடுகளைக் கண்காணித்து வாழாமைதான் இத்தகைய நிலைக்குக் காரணம் என்று மருத்துவ ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
உடல் மனரீதியான இயக்கத்தைத் தெளிவுடன் வலியுறுத்தும் சீன மருத்துவம், இதயம், நுரையீரல், கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம் ஆகிய உறுப்புகளின் செயல்பாடுகளையும் அவற்றின் கோளாறுகளால் ஏற்படும் நோய்களையும் விளக்குகிறது. அதனை முழுமையாகக் கற்றுணர்ந்து, வாசகர்களுக்குப் பயன்படும் வகையில் ஆனந்தவிகடன் இதழில் தொடராக எழுதினார் கண்மணி சுப்பு. அதன் தொகுப்புதான் ஆரோக்கியமே ஆனந்தம்!
சீனர்களின் வாழ்க்கைமுறையோடு இணைந்த யின்_யாங் சித்தாந்தமே சீன மருத்துவத்துக்கு அடிப்படை. இரவு பகல் என்ற எதிர்நிலையில் உலக இயக்கம் நடைபெறுவது போலவே, யின்_யாங் சித்தாந்தமும் நம் உடல் இயக்கத்தை நடத்துகிறது. யின்_யாங் சமச்சீராக இயங்கவில்லையெனில் என்னென்ன நோய் உண்டாகிறது என்பதை சிறப்பாக சொல்கிறார் நூலாசிரியர்.
மேலும், ஐம்பெறும் பூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவை உடலின் இயக்கத்தில் எவ்வாறு பங்காற்றுகின்றன, அவற்றின் தாக்கம் உடலில் குறைந்தாலோ அதிகமானாலோ உடல் இயக்கத்தில் ஏற்படும் சுபாவங்கள், ஒரு நாளில், எந்த நேரத்தில் எந்த உடல் உறுப்புகள் முதன்மையாகப் பணியாற்றுகின்றன, அந்த நேரத்தில் நாம் உடலை எவ்வாறு பேண வேண்டும், உயிர் வாழ்தலுக்கான தேவை என்ன ஆகியவை இந்நூலில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.