விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
இன்பமும் துன்பமும் கலந்தது மனித வாழ்க்கை. இன்பத்தின்போது மகிழ்ச்சியில் திளைக்கும் நாம், துன்பத்தின்போது துவண்டு போகிறோம். இந்தச் சூழ்நிலையில் கடவுளை நம்பும் சராசரி மனிதர்களான நமக்கு, அவரைச் சரணடைவதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால், அதற்கும் நமக்குச் சரியான வழிமுறைகள் தெரியாது.
ஆன்மிகத்தில் தேர்ந்த ஞானிகள் பற்றற்று இருப்பதால் அவர்களுக்கு இந்த இன்பமும் துன்பமும் ஒரே மாதிரிதான். அன்றாட வாழ்க்கையில் உழலும் நமக்கு அந்த நிலை சாத்தியம் இல்லை. அப்படியானால், நாம் நமது துன்பங்களிலிருந்து விடுதலை பெறுவதுதான் எப்படி?
இந்தச் சூழ்நிலையில்தான் ஆன்மிகப் பெரியவர்கள் ஒரு பாலமாக இருந்து நமக்கு உதவுகிறார்கள். ஞானிகளது வாழ்க்கை அனுபவங்கள் மற்றும் உபதேசங்களிலிருந்து, நமக்குத் தேவையானவற்றை நமக்குப் புரியும் விதத்தில் எளிமையாக விளக்குகிறார்கள். அதைப் புரிந்து கொண்டு பயணப்பட்டால், தினம் தினம் நமக்குத் திருநாள்தான் என்பதை வலியுறுத்துகிறார்கள்.
‘தினம் தினம் திருநாளே...’ என்ற தலைப்பில் சக்தி விகடன் இதழில் வெளியான உற்சாகமூட்டும் கட்டுரைகள்தான் இப்போது நூல் வடிவில் உங்கள் கரங்களில் தவழ்கிறது. குறை ஒன்றும் இல்லாத வாழ்க்கைக்கு உத்தரவாதமாக இதிலுள்ள ஒவ்வொரு கட்டுரையும் விளங்குகிறது. நூலாசிரியர் மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜி எளிய நடையில் மகான்களின் புண்ணிய வரலாறுகளையும், புராணக் கதைகளையும் மேற்கோள் காட்டி, அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு நம்மை பக்குவப்படுத்தி, பழக்கப்படுத்திக் கொண்டால், தினம் தினம் திருநாள்தான் என்பதை அருமையாகப் புரிய வைக்கிறார்.
நமது அன்றாட வாழ்க்கையின் ஊடாக, ஆன்மிகப் பாதையில் நம்மை மேம்படுத்திக் கொள்ள இது நிச்சயம் உதவும்.