விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
ஒரு மனிதன் வாய்விட்டு சிரிக்கும்போதுதான் அவனுடைய மனம் புத்துணர்ச்சி அடைகிறது. பல்வேறு நெருக்கடிகளில் சிக்கி சிதைந்து போயுள்ள இக்கால மனிதன், தன் நெருக்கடி வாழ்க்கையை மறந்து மகிழ்ச்சியாக இருப்பதற்கு எத்தனை விலை கொடுக்கவும் தயாராக இருக்கிறான். இதனைப் புரிந்துகொண்ட தொலைக்காட்சிகள்கூட நெடுந்தொடர்களுக்குக் கொடுத்து வரும் முக்கியத்துவத்துக்கு இணையாக இப்போது நகைச்சுவை நிகழ்ச்சிகளுக்கும் கொடுக்கின்றன.
நகைச்சுவைத் துணுக்குகள் வெளியிடாத பத்திரிகைகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு பத்திரிகைகளும் நகைச்சுவைக்குத் தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகின்றன. தொடக்க காலத்திலிருந்தே விகடன் இப்பணியில் முன்னோடியாக இருந்து வருகிறது. அட்டையிலேயே ஜோக்குகளை வெளியிட்டு வாசகர்களை மகிழ்வித்ததில் விகடனுக்குப் பெரும் பங்கு உண்டு.
மாலி, ராஜு வரிசையில் கோபுலுவும் நகைச்சுவைக் கொப்பளிக்கும் பல ஜோக்குகளை விகடன் வாசகர்களுக்காக சிருஷ்டித்தார். 1950 முதல் 1964 வரையில் உள்ள காலகட்டத்தில் இவர் உருவாக்கிய ஜோக்குகளை இன்று படித்தாலும் வாய் விட்டு சிரிக்க முடிகிறது.
விகடனில் வெளியான கோபுலுவின் ஜோக்குகள் தொகுக்கப்பட்டு முதல் பாகம் ஏற்கெனவே வெளியானது. இது, இரண்டாவது பாகம்!