விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் விதவிதமான அறிவியல் கண்டுபிடிப்புகளின் வரிசை, அசுர வேகத்தில் நம்முன் காட்சி தருகிறது. இயந்திரங்கள், உபகரணங்கள் சார்ந்த வாழ்க்கையை வாழப் பழகிய நமக்கு, இவை இல்லாத வாழ்க்கையை கற்பனை செய்தும் பார்க்க முடியாது. அந்த அளவுக்கு நம் வாழ்வோடு ஒன்றியுள்ள இவற்றுக்கெல்லாம் அடிநாதமாக, ஜீவனாக இருப்பது மின்சாரமே!
மின்சாரத்தின் கண்டுபிடிப்பே, இன்றைய வளர்ச்சிக்கு அடிப்படை என்னும்போது, இந்த அடிப்படையைக் கண்டுபிடிக்க எத்தனை காலம், எத்தனை எத்தனை மனிதர்கள் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்து துன்பப்பட்டிருக்கிறார்கள் என்பதை யோசித்தால், கண்டுபிடிப்பின் மகத்துவம் புரியும். காந்தப் புலத்தை வைத்து துவக்கத்தில் ஆராய்ச்சி செய்து, மின்சாரக் கண்டுபிடிப்பைத் தொடர்ந்து மின்புலத்தை ஆராய்ந்து, மின் காந்தப் புலமாக உருமாற்றம் பெறச் செய்து, அதனை பல்வேறு வழிகளில் பயன்படுத்திக் கொண்ட இந்தக் கண்டுபிடிப்பாளர்களின் மூளைத் திறன் வியக்கத்தக்கது. இன்று நம் கைகளில் சிணுங்கிக் கொண்டிருக்கும் செல்ஃபோன்களும் ரேடியோ, டி.வி.களும் இந்த மின்காந்தப் புலத்தின் அடிப்படையில் அல்லவா இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த இலக்கை எட்டுவதற்காக அவர்கள் பட்ட சிரமங்கள்தான் எத்தனை எத்தனை!
இந்தக் கண்டுபிடிப்புகள் எந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன, எப்படி கண்டுபிடிக்கப்பட்டன, அதற்கான வழிமுறைகளாக அறிவியல் அறிஞர்கள் எதை மேற்கொண்டனர் ஆகிய அறிவியல் ரீதியான தகவல்களோடு, அவர்களின் வாழ்க்கைப் பதிவுகளும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.
இதில் உள்ள கண்டுபிடிப்புகளின் சுவாரஸ்யமான சம்பவங்களைப் படித்தால், அறிவியல் ரீதியில் நாமும் ஏதாவது கண்டுபிடிக்கவேண்டும் என்ற உத்வேகம் நமக்குள் ஊற்றெடுக்கும். இந்த நூல் மாணவர்களுக்கும், அறிவியல் ஆர்வலர்களுக்கும் ஒரு டானிக். அடிப்படைக் கையேடு.