ஹலோ உங்களைத் தான் தேடுகிறார்கள்! :நூலாசிரியர்: எஸ்.வி.எல்.மூர்த்தி. வெளியீடு: கிழக்கு, எண்.33/15, எல்டாம்ஸ் சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை-18.
கவர்ச்சிகரமான நூலின் தலைப்பும், முகப்பு அட்டையும், ஒருவித ஆவலையும், படிக்க ஆர்வத்தையும் மேலோங்கச் செய்கிறது. கணக்கிலா சுவைமிகு தகவல்கள், செய்திகள் அடங்கிய பொற்களஞ்சியமாகவும் இந் நூல் அமைந்துள்ளது! நிர்வாகவியல் துறையில் பணியாற்றுபவர்களுக்கு குறிப்பாக அபார மூளை மற்றும் செயல் திறன்கள் வாய்க்கப் பெற்ற தலைகளைக் கிடுக்கிப்பிடி போட்டு வளைத்துப் போடும் "ஹெட்-ஹண்டர்ஸ்' எனப்படும் மனிதவள மேம்பாட்டுத் துறை சார்ந்தவர்களை எல்லாம் ராக்கெட் வேகத்தில் சிகரத்தை எட்ட வைத்திடும் "மாயக்கம்பளம்' இந்நூல் எனலாம்."இன்போசிஸ்' நாராயணமூர்த்தி, "விப்ரோ' ஆஸிம் பிரேம்ஜி, போர்டு' கம்பெனியின் ஹென்றி, "ஜெனரல் எலெக்ட்ரிக்' ஜாக்வெல்ஷ் தங்களது பெயர்களை மட்டுமின்றி, அவர்களது நிறுவனங்களையும் உலகளவில் பிரகாசிக்கச் செய்த "பஞ்சதந்திரங்கள்' இந்நூலில் அலசி ஆராயப்பட்டுள்ளன. தகுதியானவர்களை உரியதோர் பணிக்குத் தெரிவு செய்து, நிறுவனத்தின் குறிக்கோள்கள், இலக்குகளை மூளைச் சலவை செய்வது, அவ்வப்போது தேவைக்கேற்ப ஊக்குவிக்கும் பயிற்சிகள் உற்சாக போனஸ், ஊதியம் மற்றும் பதவி உயர்வு போன்ற பல்வேறு மனிதவள மேம்பாட்டுச் செயல்பாடுகளின் நிமித்தம் நாளடைவில் வைரங்களாக அவர்கள் ஜொலிப்பதில் வியப்பேது?மேலும், வாசகர்களது நரம்புகளில் சூடேற்றிவிடும் விதமான எக்கச்சக்கமான உதாரணங்கள்: "சியாச்சின்' சிகரத்தை பாகிஸ்தானிடம் இருந்து மீட்டிடும் பானாசிங், ஊதாரி - ரோமியோக்களாகச் சுற்றித் திரிந்த கல்லூரி மாணவர்களை நல்வழிப்படுத்துதல், நமது குரு - சிஷ்ய பாரம்பரியம் தான் "மென்டரிங்' என்பது, மற்றும் பித்தாக்கரஸ் சூத்திரம் மட்டுமின்றி, பழைய தமிழ் சினிமாப் பாடல்கள் என்று பல தகவல்கள் உள்ளன.எத்துறையில் பணியாற்றுபவர்களாக இருப்பினும், அவர் தம் செயல் திறனை மேம்படுத்தி, வளம் காண உதவிடும் உன்னதமான நூல். வேலை வாய்ப்பைத் தேடுபவர்களுக்கு அரியதோர் வழிகாட்டி இந்நூல்.