சிலப்பதிகாரத்திலும், சிலம்புச் செல்வரிடத்தும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் இந்நூலாசிரியர். சிலப்பதிகார காப்பியத்தின் சுவையையும், சிறப்புகளையும், கதைச் சுருக்கத்தையும் கொண்டது இந்நூல். சிலம்பினை கற்கச் சிறந்த நூல் இது என்று, பதிப்புச் செம்மல் மெய்யப்பனார் மதிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு பரலும், ஒரு தொடுக்கப்பட்ட மாலை தான். பதினாறு தலைப்புகளில், சிலப்பதிகார தோட்டத்தில் மறைந்து கிடக்கும், மனோரஞ்சித மலர்களையும் வெளிக் கொணர்ந்திருக்கிறார் ஆசிரியர் என்று, முனைவர் தி.ராசகோபாலன் பாராட்டியுள்ளார்.
சிலப்பதிகார காப்பியத்தில், முத்தமிழும் கொஞ்சிக் குலாவுகின்ற அழகையும், இசை, நடனம் உள்ளிட்ட கலைகளின் மாண்பையும், பாத்திர படைப்பின் திறத்தையும், தொடர்களின் இனிமைச் சுகத்தையும், இளங்கோவின் புலமைப் பெருக்கையும் உணர்ந்து சுவைக்க, ஒவ்வொருவரும் இந்நூலை படிக்க வேண்டும்.
ஜவஹர்