தமிழகத்தில் தெவிட்டாத இன்பம் எது என்றால், ராமாயணக் கதை கேட்பது தான் என்று அறுதியிட்டுக் கூறலாம். ராமாயண கதையை எந்த வகையில் சொன்னாலும், மக்கள் இன்புறுவர். இந்நூல், ‘அபூர்வ ராமாயணம்’ என்ற நூலிலிருந்து, சிலபகுதிகளைச் சுவையுடன் விளக்குகிறது. நூலாசிரியரின் எளிய, இனிய தமிழ் நடை, நூல் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது எனலாம். தொட்டிலில் படுத்திருந்த ராமன், பூஜை அறையில் பொற்கிண்ணத்தில் இருந்த பாயசம் சாப்பிட்ட நிகழ்ச்சியும் (பக்.3), காட்டிற்கு வந்த ராமனை பரதன் அழைத்துச் செல்ல வந்தபோது, ஜனக மகாராஜாவும் உடன் வந்தார் என்பதும் (பக்.93), வீடணன் அடைக்கலம் புகுந்தபோது, இலக்குவன் கேட்ட கேள்வி (பக்.141), ராவணன் சங்கரனிடம் வாள் பெற்றது (பக்.146) போன்ற செய்திகள், இதுவரை பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். இப்படி, பல சுவையான செய்திகளை, 44 தலைப்புகளில் இந்நூலில் தெரிவிக்கும் நூலாசிரியரின் திறனைப் பாராட்ட வேண்டும்.
டாக்டர் கலியன் சம்பத்து