ஆங்கிலம்: ராதாநாத் சுவாமிகள்
தமிழாக்கம்:பி.கே.சம்பத்
வெளியீடு: துளசி புக்ஸ்
மும்பை – 400 007
ரிச்சர்ட் ஸ்லேவின் என்கிற, 19 வயது இளைஞன், 1970களில் அமெரிக்காவின் சிகாகோ நகரிலிருந்து, இந்திய ஆன்மிகத்தைத் தேடி இமயமலைக்குச் சென்று இந்தியத் தத்துவ ஞானிகளிடம் உறவாடி, இந்தியத் தத்துவ ஞானத்தைக் கைவரப் பெற்று, துறவில் ராதாநாத் சுவாமிகள் என்ற திருநாமத்தோடு, ஆன்மிக உலகில் உலா வந்து கொண்டிருக்கிற துறவியின் சுயசரிதை நூல் தான் இந்நூல்.
இந்தியாவின் ஆன்மிக சாம்ராஜ்யத்தை அடைய, அவர் எடுத்துக் கொண்ட முயற்சி நம்ப முடியாத நிகழ்ச்சியாக இருக்கிறது. ஆன்மாவை அவர் நேருக்கு நேர் பார்த்த அனுபவம் பற்றி, அவரது பதிவுகள், நம்மை வியக்க வைக்கின்றன.
ஒரு சாதகன், விடா முயற்சியுடன் ஆன்மாவைத் தேடி, பிறகு தேடலின் முடிவில் ஞானியாக முடியும் என்பதை நிரூபித்துக் காட்டிய சுயசரிதை நூல் இந்நூல். ‘புனிதப் பயணம்’ ஒரு அற்புதமான ஆன்ம ஞானத்தை பக்தி யோகம் என்ற அக்னிப் பரீட்சையில் தன்னை உட்படுத்தி, துறவறத்தின் துாய்மையை, முழுதாய் பெற்ற ஒரு யோகியின் சுயசரிதை நூல். படிக்கப் படிக்க, நம்மை பரவசத்தில் ஆழ்த்துகிறது இவ்ஞானப் பனுவல்.
கிழக்கு நோக்கிப் புனிதப் பயணம், அன்னை இந்தியா, இமாலயத்தின் புனிதப் பயணம், கருணை மிக்க கானகம், முடிவுரை என்ற தலைப்புகளில் ஒரு நாவல் போல பல சாகச நிகழ்வுகளோடு சுயசரிதை நூல் நிறைவடைகிறது.
பக்தி மார்க்கம் வழியாக, ஆன்ம ஞானத்தைப் பெற்ற தவயோகியாக இன்றைக்கு ஆசிய, ஐரோப்பா, அமெரிக்கா என, பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து, பக்தி மார்க்கத்தைப் போதித்து வருகின்ற தவநெறிச் செல்வர். இத்தகைய இவரது சுயசரிதை நூல் ஒரு ஞானக் கருவூலம்.
குமரய்யா