கணையாழி, படித்துறை, தளம் இதழ்களில் வெளிவந்த மொழியாக்க சிறுகதைகளில், இந்தியில் இருந்து 6, ஆங்கிலம், வங்கம், மைதிலி, மராத்தி, மலையாளம், பஞ்சாபி மொழிகளில் இருந்து தலா ஒன்று வீதம் மொத்தம், 12 சிறுகதைகள் ஆகியவை இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. அவற்றில், 100 ஆண்டுகளுக்கு முன், பிரேம்சந்த், இந்தியில் எழுதிய, ‘பண்ணையாரின் கிணறு’, மருமகளால் அடிபட்டு இறந்து போன பூனைக்கு பிராயச்சித்தம் செய்ய முற்படும் மாமியார் – பண்டிட்ஜியின் யதார்த்தத்தை நகைச்சுவையுடன் தந்துள்ள ‘பிராயச்சித்தம்’, சமூக உணர்வுடன் தலித் விதவையின் ஆறாத் துயரங்களை, ஆணித்தரமான முடிவை, வெளிப்படுத்தும் மராத்தி சிறுகதை, ‘சத்யகாம ஜாபாலி’ ஆகியவற்றின் மொழிபெயர்ப்பு, மூலத்தை படிக்கும் உணர்வை தருகின்றன. படைப்புக்கு கூடி வரவேண்டிய மனநிலையை மொழிபெயர்ப்பிலும் ஈடுபட செய்துள்ளதன் மூலம், மொழிபெயர்ப்பாசிரியரின், மொழிபெயர்ப்பு, இயல்பாகவே, சுவைபட அமைந்துள்ளது.
பின்னலூரான்