‘சமஸ்கிருதமும், காஷ்மீரும், தனி அந்தஸ்தும், தனிப் பெருமையும் இனியும் பெற வேண்டுமா?’ என்ற விவாதத்திற்கு விடை தருவது போல், இந்த நூல் வெளிவந்துள்ளது. சமஸ்கிருத சகஸ்ரநாமத்தை செந்தமிழ் விரிவாக விளக்கி உயர்த்தி உள்ளது.
சக்தி உபாசகர்களால் போற்றப்பட்டு, 300 ஆண்டுகளுக்கு முன் காஷ்மீர் பண்டிட் சாகிப்கால் எழுதிய ஸ்ரீபவானி சகஸ்ர நாமத்தின் ஆயிரம் நாமங்களுக்கு அழகிய தமிழில் விளக்கம் தந்துள்ளார், அருளிசைக் கவிச்செல்வர் தமிழ்மாறன்.
இந்த நூல், ருத்ர யாமள தந்திரத்தில், நந்திகேசுவரனுக்கு சிவபெருமான் உரைத்த உபதேசமாக, நாமாவளி தொகுப்பாக அமைந்துள்ளது.
பவன் என்றால் சிவன்; அவரது சக்தி பவானியின் சிறப்பை நூல் முழுவதும் விளக்கி, ‘சாக்தத்தின் சிகரமாக’ இந்நூலைச் செதுக்கி உள்ளார் ஆசிரியர்.
கம்பர், திருமூலர், அபிராமி பட்டர், பாரதியார் ஆகியோர் கவிதைகளுடன், தன் கவிதையையும் சேர்த்து விளக்கம் எழுதி, சமஸ்கிருதத்தை இனிக்கும் செந்தமிழ் ஆக்கி உள்ளார். ‘நந்தா’ (பக்கம். 53) ஆனந்தம் ஆனவள் என்று விளக்கி உள்ளார். ஆனால், ‘மறையாத’ என்ற பொருளில் கம்பர், ‘நந்தா விளக்கனைய நாயகன்’ என்று கூறியுள்ளார்.
முனைவர் மா.கி.ரமணன்