கொரியன், சீனம், பிரித்தானியா, இலத்தீன் அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்களின் கதைகள் அடங்கியுள்ள தொகுதி. இதில், ‘மலை மேல் வந்தது கரடி’ என்ற கதை தான், தொகுதியில் உள்ள கதைகளிலேயே சிறந்த கதை. ஆலிவ் மன்றோ (கனடா) எழுதிய கதை. ஞாபக மறதி நோயில், தன் கணவனையே மறந்துவிடும், 70 வயது மனைவியின் நலத்திற்காக, எதையும் செய்ய தயாராகும், ஒரு தற்காலக் கணவனை, இந்தக் கதை சித்தரிக்கிறது.
கேப்ரியேல் கார்ஸியா மார்க்வெஸ், ‘இப்போதே ஒரு நாளில்’ என்ற கதையை எழுதியிருக்கிறார். மாய யதார்த்த வாதம், மார்க்வெஸிடமிருந்து தான் பிரபலமானது. பல் வலிக்கு நிவாரணம் தேடி வந்த மேயரை, வலியுணர்விழக்கச் செய்யும் மருந்து இல்லாமலேயே, பல்லைப் பிடுங்கிப் பழி தீர்க்கும் பல் வைத்தியரை, மார்க்வெஸ் காட்டுகிறார்.
‘இங்கிலாந்தும் என் குல மக்களும்’ – யான் லியாங்கே எழுதிய சீனக் கதை. பிரிட்டன் பேரரசு, சீனாவுக்கு சொந்தமான தேசிய சொத்துக்களை சுரண்டி சென்றதை, நையாண்டியுடன் இந்தக் கதை சொல்லி செல்கிறது. ‘கோடையில் ஒரு மழை’ என்ற கொரியன் சிறுகதையை எழுதியவர், ஹ்வாங் சுன்–வன். இந்தக் கொரிய மொழி சிறுகதையைப் போல், வேறு எந்தச் சிறுகதையும் நேசிக்கப்படவில்லை என, கதையின் ஆங்கில மொழிபெயர்ப்பாளர் குறிப்பிடுகிறார்.
கடந்த காலத்தில் இழந்துவிட்ட, வெகுளித்தன்மை இணைந்த பழங்கால நினைவுகளின் ஏக்கம், மனித வாழ்க்கையின், எளிதில் உடைந்து போகும் தன்மை, பழங்காலக் கிராம வாழ்முறைகளுக்கும், தற்கால நகரக் கடின வாழ்க்கைக்கும் உள்ள முரண்பாடுகள், உண்மையான மகிழ்ச்சியின் எளிமை, அனைத்தையும் உள்ளடக்கியதாக இந்தக் கதை இருக்கிறது. சரளமான நடையில் மொழிபெயர்த்திருக்கிறார் ச.ஆறுமுகம்.
எஸ்.குரு