திருலோக சீதாராம், எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். அவர் தாய்மொழி, தெலுங்கு. கடுமையான சுய உழைப்பால் கல்வியில் மேம்பாடு உற்றார். ஆங்கிலத்திலும் அபாரமான அறிவு உடையவராக திகழ்ந்தார். கணக்கெழுதுவதிலும் அவர் திறமை அடைந்தார். இதன்மூலமும், தம் வருமானத்தை அவர் பெருக்கிக் கொண்டார்.
கிட்டத்தட்ட, 40 ஆண்டுகள் அவர், வறுமையில் அழுந்தியிருந்தார். ஆனால், தம்முடைய கடைசி, 13 ஆண்டுகள், அவர் வளமுற்று, வாகன வசதிகளோடு வாழ்ந்தார். அவர் வளமான வாழ்வு பற்றி, நூலாசிரியர் ஏதும் கூறவில்லை.
திருலோகம், ஒரு சித்த சாகரம். இதில் தத்துகின்ற திரைகள், சுழிகள், எற்றிடும் காற்று, வெண்மணி சூழ்ந்த பாகம், சுட்ட வெந்நீர் ஒட்டம், அன்ன பிற பற்றி நூலாசிரியர் ஏதும் கூறவில்லை. தாமஸ் ஹுட், லாங்பெலோ, மாத்யூ ஆர்னால்டு, ஹாப்கினிஸ் பாடல்களை, திருலோகம் தமிழில் தந்தார். மேலும், அவருடைய உரைநடையும், பாடல்களும் ஆங்கில ஆக்கம் பெற்று வெளிவந்துள்ளன. இவை பற்றியும், நூலாசிரியர் ஏதும் கூறவில்லை.
‘மடிந்தாலும் பொய் கூறேன்’ என்று அறிவித்து, அவ்வாறே வாழ்ந்து காட்டியவர் மகாகவி பாரதியார். அவருடைய ஆன்மிக புத்திரராகிய திருலோக சீதாராம், மகாகவி நடந்த பாதையில் அலகிட்டு, ஆர்வநடை பயின்றவர். அவரைப் பற்றி வரையப்படும் நூலில் தவறான செய்திகளுக்கு இடமில்லை. இதைக் கருத்தில் கொண்டே நூலாசிரியர் செயல்பட வேண்டும்.
நூலாசிரியர் இராஜாமணி, திருலோகத்தின் பால், சால ஈடுபாடு உடையவர் என்றாலும், பிரபலங்களின் அறிவிப்புகள் உண்மை என்று நம்பி ஏமாந்திருக்கிறார். கவிஞர் வாலியின் கவர்ச்சியான புளுகைத் தம் நூலின், 68ம் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். வாலி கூறியதாக ஆசிரியர் குறிப்பிட்டிருப்பதாவது:
* திருலோக சீதாராம், ‘கந்தர்வ கானம்’ எனும் தம்முடைய காவியத்தை தேவ சபையில் அரங்கேற்றினார்.
* இதற்காக, திருலோகத்திற்கு மூன்றில் ஒரு லோகத்தை பரிசாகத் தரலாம்.
* அரங்கேற்றத்தின் போது, காவியத்தை வாலி கேட்டார்.
* காவியத்தைத் தம் செவி வங்கியில் சேமித்து வைத்துக் கொண்டார்.
இந்த செய்திகள் அனைத்துமே, தவறானவை. வாலி, எந்த தேவசபைக் கூட்டத்திற்கும் வந்ததே இல்லை. வாலி கூறியவை மானதக் காட்சிகள் என்று நூலாசிரியர் கூறும் பாங்கு, திருலோகம் ஏற்காத சாமர்த்தியம்.
இராஜாமணியும் தேவசபைக் கூட்டத்திற்கு வந்ததில்லை. ஆகவே, செய்திகளை அவர், அன்பர் சுப்பராயலு வரைந்தவாறு, தம் நூலில் பதிவு செய்திருக்கிறார். இது சரிதான். ஆனால், சுப்பராயலுவின் பெயரை, அவர் கூறாமல் போனது முறையன்று. ‘சிவாஜி’ பத்திரிகையை திருலோகம் தோற்றுவித்தார் என்று நூலாசிரியர் கூறுகிறார். இது தவறு. திருலோகம், ‘சிவாஜி’ பத்திரிகையை, திருச்சி சிவஞானம் பிள்ளையிடமிருந்து கிரயம் பெற்றார். ‘குட்வில்’லுக்காக பதினாயிரம் ரூபாயை, பிள்ளைக்கு, திருலோகம், தவணை முறையில் தந்திருக்கிறார்.
தேவசபையின் பிரஹஸ்பதி சுவாமிநாத ஆத்திரேயர். சில கூட்டங்கள் நடந்த பிறகே, கரிச்சான் குஞ்சு, சபையில் இணைந்தார்.
எது எப்படியாயினும், இராஜாமணியின் படைப்பு, ஒரு துவக்க முயற்சி என்ற வகையில், வரவேற்பிற்கு உரியது.
முதுமுனைவர் டி.என்.இராமச்சந்திரன்