கடந்த, 1936 முதல் 1955 வரை, 20 ஆண்டுகள், தமிழ் முரசு, தமிழன் குரல், கிராமணி குலம் ஆகிய இதழ்களில் ம.பொ.சி., எழுதிய தலையங்கங்கள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. இவற்றின் மூலம் தமிழக வரலாற்றையும், சமுதாய எழுச்சியையும் அறிய முடிகிறது.
எனினும், இதில், அவரது, ‘செங்கோல்’ இதழ் தலையங்கங்கள் இடம்பெறவில்லை.
‘ஜாதி, மதம், கட்சி வேற்றுமைகளுக்கு இடமின்றி, தமிழ் வளர, தமிழர் வாழ, தமிழகம் செழிக்க பாடுபடுவதே என் இதழ்களின் நோக்கம்’ என்றார் ம.பொ.சி., (பக்.21).
ஆனால், பிற தலைவர்கள், தமிழை வைத்து கட்சியை வளர்த்தனர்; அவர்களை தோலுரித்துக் காட்டினார்; சென்னை, திருத்தணி, திருவிதாங்கூர் தமிழ் பகுதிகள், சித்தூர் பகுதிகள் இவற்றை தமிழகத்தோடு சேர்க்க போராடினார், எழுதினார். ம.பொ.சி.,யை முதன்முதலில் எழுத்தாளன் ஆக்கியது, ‘கிராமணி குலம்’ மாத இதழ். 10 மாதங்களே வந்த இதழ். ஆனாலும், ம.பொ.சி., என்ற எழுத்தாளரை உருவாக்கி தந்த பெருமை இதற்கு உண்டு.
தமிழ்முரசில், காந்தி மறைவுக்கு எழுதிய கண்டன தலையங்கத்தில், ‘நாம் முதலில் தமிழர், இரண்டாவதாக இந்தியர், இதைத்தவிர வேறு எந்தச் ஜாதி சமயப் பெயர்களையும் ஏற்பது தமிழ் இனத்தைப் பிளவுபடுத்தும்’ (15.2.1948). ஜாதி பேதங்களை எழுத்தால் சாடியுள்ளார். ‘ஜாதியின் பெயரால், கல்லூரி ஸ்தானங்களை பங்கிட்டுக் கொடுப்பது, அதுவும் இந்தக் கேவல முறையை அரசாங்கமே கையாளுவது வெறுக்கத்தக்கதாகும்’ (பக்.187). ‘வேங்கடத்தை விட மாட்டோம்; உரிமைக்கு எல்லை வேங்கடம்’ என்று எழுதி போராடி, முடிவில் திருத்தணியை மீட்ட வரலாறு தரப்பட்டுள்ளது.
‘கண்ணகியைப் பழிக்கும் கருஞ்சட்டை தலைவர்’ என்று, சிலப்பதிகாரத்தை தாக்கிய ஈ.வெ.ரா.,வை தாக்கி, ‘ஈ.வெ.ரா., தமிழ்ப் பண்புப்பற்றி முதலில் யாரிடமேனும் பாடம் கற்றுக் கொள்ளட்டும். விலை போகாத பண்டங்களுக்கு, வியாபாரி லேபிளை மாற்றுவது போல், நாராயணசாமி, நெடுஞ்செழியன் ஆனார்; ராமையா அன்பழகன் ஆனார்’ (பக்.௨௧௮) என்று தமிழை வைத்து அரசியல் வேட்டையாடியவர்களைச் சாடியுள்ளார். திராவிட அலை, நாத்திக பேரலைகள் எழுந்தபோது, தமிழகத்தில், தமிழால் ஒரு எழுச்சி அலையை உருவாக்கி வெற்றி கண்ட ம.பொ.சி.,யை, இந்த நூல் மீட்டளிக்கிறது.
-முனைவர் ம.கி.இரமணன்