இலக்கியவாதிகளான தகழி, கேசவ தேவ், வைக்கம் முகம்மது பஷீர் ஆகியோரின் நாவல்களைப் படித்தபோது அடைந்த இலக்கிய இன்பத்தை, இந்த நாவலைப் படித்த போதும் அடைந்தேன். பள்ளிப் பருவத்திலேயே காதலிக்க துவங்குகின்றனர் கதாநாயகன் அனந்தகிருஷ்ணனும், கதாநாயகி சொர்ணாவும். அனந்தகிருஷ்ணனின் தந்தை காதலுக்கு எதிராக நிற்கிறார். ஜாதி ஆதிக்கமும், பண ஆதிக்கமும் காதலர் பாதையில் குறுக்கிடுகின்றன.
பள்ளிப் பருவத்திலேயே ஊரை விட்டுப் போய் வேற்றூரில் கல்யாணம் செய்து வாழ்க்கை நடத்துகின்றனர். அங்கும் வந்து காதலர்களைப் பிரிக்கிறார், அனந்தகிருஷ்ணனின் தந்தை. கடைசியில் காதலர்கள் என்ன ஆயினர் என்பது தான் கதை! அனந்தகிருஷ்ணன், சரத் சந்திரரின் தேவதாசைப் போல் ஒரு சோகச் சித்திரம். சொர்ணாவின் பாத்திரமோ, சுடர்முகம் தூக்கி, கோபுரக் கலசமாக மின்னுகிறது. பத்தொன்பது அத்தியாயங்கள் உள்ள இந்த நாவலில், கடைசி அத்தியாயத்தில் பாத்திரப் படைப்பில், பால்ராசய்யா சிகரத்தைத் தொடுகிறார்.
எஸ்.குரு