பாட்டுக்கு ஒரு புலவன் பாரதியை, பாரத தேசம் எங்கும் போற்ற வேண்டும் என, தவம் இருப்பவர், இந்த நூல் ஆசிரியர், எதிரொலி விசுவநாதன். மகாகவியின் மாணவர் பரலிசு. நெல்லையப்பரின் மாணவர் இவர். விநாயகர், முருகன், கண்ணன், பராசக்தி ஆகிய தெய்வங்களை பாரதி பாடியிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்த தகவல். ஆனால், அவர் சிவனையும் பாடியுள்ளார்.
சிவபெருமான் மீது, 100 இடங்களில் பாரதி பாடியுள்ளதை இந்த நூலில் அழகாக, ஆசிரியர் பட்டியலிட்டுள்ளார். 15 வயதில் பாரதி எழுதிய முதல் பாடலில், ‘எட்டீசன்’ எனும் எட்டயபுர சிவனைப் போற்றியுள்ளார்.
‘இளசை ஒருபா ஒருபஃது’ எனும் பதிகத்தின், 11 பாடல்களில் சிவபெருமானின் சிறப்பை பாரதி பாடியுள்ளார். இதைத் தேடி வெளியிட்டுள்ள நூலாசிரியர் பாராட்டிற்குரியவர். ‘அன்பே சிவம், உலகத் துயர் யாவையும் அன்பினில் போகும்’ என்று பாடினார். ‘அன்பால் சாக்கியன் எறிந்த கற்களையும் சிவபெருமான் மலர்களாகக் கருதி அங்கீகரிக்கவில்லையா?’ என்று உரையில்
எழுதினார். இரண்டையும் சான்றுகளாக விளக்கியுள்ளார்.
‘ஆதிசிவம் பெற்று விட்டான், சுத்த அறிவே சிவம் என்று கூறும் சுருதிகள் கேளீரோ, சந்ததமும் எங்கும் எல்லாம் தானாகி நின்ற சிவம்’ என்றும் எங்கும் நிறைந்த சிவனை பாரதி பாடிய இடங்களை சுட்டிக் காட்டியுள்ளார் நூலாசிரியர்.
கடந்த, 1911ம் ஆண்டு அக., 11ம் தேதி, ஆங்கிலேயர், பாரதியின், ‘கனவு, ஆறில் ஒரு பங்கு’ ஆகிய, இரு கவிதை நூல்களைத் தடை செய்து ஆணையிட்டனர். வைத்ததும் பற்றிக் கொள்ளும் நெருப்பு போல், படித்ததும் பாரதி பாடல்கள் மனதைப் பற்றிக் கொண்டு தேசியக் கனலை எழுப்பும்.
‘முப்போதும் சிவனடி ஏத்துவான், தாய்தனை முன்னம் ஈன்றவன்’ என்று தாய்வழித் தாத்தாவின் சிவபக்தியை, ‘கனவு’ என்ற சுயவரலாற்றில் எழுதியுள்ளார். தாத்தாவின் சிவபக்தி, பேரன் பாரதியையும் பாட வைத்துள்ளது. காசி மாநகரில் பாரதி வளர்ந்தபோது, அவருடன் சிவபக்தியும் வளர்ந்ததை, விளக்குகிறார் நூலாசிரியர்.
குள்ளச்சாமி, கோவிந்தசாமி ஆகிய சித்தர்கள், பாரதிக்கு சிவஞானத்தை உபதேசித்துள்ளனர். காளிதாசன், தாசியின் கொங்கைகளை சிவலிங்கமாக பூஜித்ததை, ‘கொங்கைகளே சிவலிங்கம் என்று கூறக் கோக்கவிஞன் காளிதாசனும் பூஜித்தான்’ என்று பாடியுள்ளதை,
‘காமகலா தியானம்’ என்கிறார் நூலாசிரியர். ‘பாரதியார் சிவநாம அர்ச்சனை’ நிறைவில் தரப்பட்டுள்ளது நூலாசிரியரின் ஆய்வுக்கு ஒரு மணிமகுடம்.
முனைவர் மா.கி.ரமணன்