‘நெப்போலியனை, பிரான்ஸ் மக்கள், தங்கள் மானம் காக்க வந்த மாவீரனாக்கினர். இங்கிலாந்து எழுத்தாளர்களோ, ரத்தவெறி பிடித்த யுத்த பிசாசு ஆக்கினர் அல்லது கேலி பொருளாக சித்திரித்தனர்’ என்பதை குறிப்பிட்டு, இரு நாட்டு படைப்புகளையும், தீர ஆய்ந்து, நெப்போலியனை பற்றி எழுதியிருக்கிறார் ஆசிரியர். மொத்தம், 29 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு கட்டுரை முகப்பிலும், நெப்போலியனின் பிரபல வாசகங்களும், புத்தக குறிப்புகளும் இடம் பெற்றுள்ளமை, சிறப்பு.
குறிப்புகள், படங்கள், வரைபடங்கள் என, அனைத்தையும் தெளிவாக கொடுத்திருப்பதன் மூலம், ஆசிரியரின் தீவிரமான உழைப்பு பளிச்சிடுகிறது.
பிரான்ஸ் – ரஷ்யா போர் நடந்து கொண்டிருந்த நேரம், நெப்போலியன், தன் மனைவி ஜோசபினுக்கு தினமும் ‘கிளுகிளு’ காதல் கடிதங்கள் எழுத தவறவில்லை. நெப்போலியனின் செல்ல பெயர், நபுலியோ; அவர், பூனையை கண்டால் குலை நடுங்குவார்; தினமும், 48 கோப்பைகள் காபி குடிப்பார்; 33 ஆயிரம் கடிதங்கள் எழுதியிருக்கிறார், உள்ளிட்ட நெப்போலியன் பற்றி ஏராளமான தகவல்கள் நிரம்பி இருக்கின்றன.
– சி.கலாதம்பி