சண்டைகள் ஆயிரம் இருந்தாலும், சங்கடங்கள் ஆயிரம் குடைந்தாலும், அனைத்திற்கும் அருமருந்தாக அமைவது அன்பு தான் என்பதை, தன் உணர்வுப்பூர்வமான எழுத்தால் உணர வைத்துள்ளார் வான்மதி. எத்தனை நகை அணிந்தாலும், புன்னகைக்கான ஆத்மார்த்தமான ஈர்ப்பையும், ஆசியையும், காமாட்சி என்ற கதாபாத்திரத்தின் ஊடே விவரித்திருக்கிறார்.
மாமியார் – மருமகள் சண்டையை எப்படி கையாள்வது என்பதை, லதா என்ற தன் தோழியின் கதையை வைத்து உணர்த்தி இருக்கிறார். அதை விவரிக்க அவர் பிரயோகிக்கும் வார்த்தைகள் மிக அழகு. ‘பொருளில்லார்க்கு இவ்வுலகில்லை’ என்ற வலி நிறைந்த வரிகளை உணர்த்த, வசுமதியின் துணையை நாடிய வரிகள் என, பக்கம் பக்கமாய் எழுதித் தள்ளி இருக்கிறார்.
பொய் புரட்டில்லாத கணவன் கிடைத்த மகிழ்ச்சியில், மீனாட்சி என்பவள் துள்ளிக் குதிப்பதை விமர்சித்திருப்பதும் தனி ரகம் தான். ‘நேசிப்பு இருக்கும் இடத்தில், வாஞ்சை இருக்கும் வீட்டில், பிரியம் இருக்கும் மனதில், அன்புக்கு பஞ்சம் இல்லை’ என்று, ‘பஞ்ச் டயலாக்’ உடன், பக்கங்களை முடித்திருக்கிறார்.
– ஆர்.மீனா