புதுச்சேரியின் பழைய பெயர்களில் ஒன்று வேதபுரம். அங்கு உள்ள மாரியம்மன் ஆலயங்கள், காரைக்கால் பகுதியை சுற்றியுள்ள அம்மன் கோவில்கள் ஆகியவற்றை பற்றிய தகவல் களஞ்சியமாக திகழ்கிறது இந்த நூல். வெறும் தகவலாக மட்டுமின்றி, அரிய செய்திகளை வரலாற்று பின்னணியோடு, இரண்டற கலந்து, இந்த நூலை படைத்துள்ளார் ஆசிரியர். மாரியம்மனை பற்றிய பழங்கதைகளில், அவள் வெப்பு நோய் தீர்ப்பவள் என்பது பரவலாக அறிய கிடைக்கிறது. புதுச்சேரி மாநிலத்தில், மாரியம்மன் பல பெயர்களில் வழிபட பெறுகிறாள். மாரியம்மனுக்கு கூழ்வார்த்தல், உயிர்பலி கொடுத்தல், புற்றுமாரியம்மனாக அம்மன் உறைந்துள்ளமை; நாகம் தீண்டாதவாறு காப்பவள்; வேம்பின் அடியில் உறைந்துள்ளமை முதலியவற்றை தகவல்களாக எடுத்துரைத்துள்ளார்.
அம்மை நோயைத் தணிக்கும் மாரியை, முத்துமாரி என்று அழைப்பது உண்டு என்பதை, நல்லாண்ட முத்துமாரியம்மன் என்ற பகுதியில் சுட்டுகிறார் (பக். 32). ‘தேடி உனைச் சரண் அடைந்தேன் தேச முத்துமாரி’ என்று பாரதி புதுவையில் பாடிய அந்த பாட்டு, புதுச்சேரி உப்பளம் நேதாஜி தெருவில் உள்ள கங்கை முத்துமாரியம்மன் கோவிலில் பாடப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார் (பக். 39).
பச்சை நிறம் கொண்ட முத்து உயர்வானதால், கடலில் செல்லும் மீனவர்கள், அதன் நினைவாக, அம்மனுக்கு, பச்சை அம்மன் என்று பெயர் வைத்திருக்கலாம் என்று கருதுகிறார். பச்சை என்பதற்கு, இளமை, செழிப்பு, மென்மை, குளிர்ச்சி என்று பல பொருள் உண்டு. அதனால், பச்சையம்மன் என்று அழைக்கப் பெறுவதையும் கேட்டறிந்து ஆசிரியர் பதிவு செய்துள்ளார் (பக். 51).
முத்தியால்பேட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் (53), வில்லியனூர் முத்துவாழி மாரியம்மன் (59), முருகப்பாக்கம் துரோபதையம்மன் (64), வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் (77), அம்பகரத்தூர் பத்ரகாளி (132) ஆகிய கோவில்களின் வரலாறு, அம்மன் அருள்பாலித்த முறை ஆகியவை விரிவாக விளக்கப்பட்டுள்ளன. காரைக்கால் அம்மையாரை பற்றிய செய்திகள், இந்த நூலின் இறுதி பகுதியாக அமைந்துள்ளன. அது தீவாக தனித்து நிற்கிறது. அம்மனை வழிபடும் அன்பருக்கு, ஒரு கைச்சாத்தாக இந்த நூல் திகழ்கிறது.
இராம.குருநாதன்