உலகில், மனித நாகரிகம் தோன்றி வளர்ந்தது, நதிகளின் கரைகளில் தான். நம் பாரத தேசத்தில் வடக்கில் துவங்கி தெற்கு முனை வரை ஆயிரக்கணக்கான நதிகள் பாய்கின்றன. அவற்றின் கரைகளில் எண்ணிறந்த கோவில்கள். அந்த நதிகளின் தோற்றுவாய் பற்றியும், அங்கு அமைந்துள்ள புண்ணிய ஷேத்திரங்கள், அங்கு தோன்றிய கோவில்கள் பற்றி எவ்வளவோ புராண கதைகள். இந்த நூலாசிரியர் மிக முயன்று, அவை பற்றிய விவரங்களை சேகரித்து இந்த நூலை எழுதியிருக்கிறார்.
அத்துடன், அவற்றில் பலவற்றிற்கு நேரடியாக சென்று தன் அனுபவங்களையும் பதிவு செய்திருக்கிறார். பிரிட்டிஷ் பிரதமராய் இருந்த வின்ஸ்டன் சர்ச்சிலின் தந்தை ரண்டால்ப் சர்ச்சில், இந்தியாவை சுற்றி பார்க்க வந்திருந்தபோது அவரை காசிக்கு அழைத்து வந்திருக்கின்றனர்.
அங்கு, கங்கையில் குளித்தால், பாவங்கள் கரையும் என்ற நம்பிக்கையில், நீராடும் எண்ணற்ற மனிதர்களை பார்க்கிறார். ‘‘ஆஹா! நம் நாட்டு பிரதமர் கிளாட் ஸ்டோன், இங்கு வந்து குளித்தால், அவர் செய்திருக்கும் பாவங்கள் எல்லாம் பஞ்சாய் பறந்து விடுமே,’’ என்று நகைச்சுவையாய் குறிப்பிட்டாராம். பயனுள்ள நூல்.
மயிலை சிவா