‘தமிழ்நாட்டு மக்கள், மதுவுக்காக 2013ம் ஆண்டில் செலவழித்த தொகையில், ஐந்து லட்சம் வீடுகள் கட்டியிருக்கலாம்; 200 மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கியிருக்கலாம்; 10 ஆயிரம் பள்ளிகளைக் கட்டியிருக்கலாம்’ என்கிறார், நூலாசிரியர் (பக்.5) அதே ஆண்டில் சிகரெட், சுருட்டு, பீடிக்கு செலவு செய்யப்பட்ட தொகை எவ்வளவு; அந்தப் பணத்தில் வேறு சமூக நலப்பணிகளையும் செய்திருக்கலாம் அல்லவா என்ற கேள்வி நம்முடையது.
குடி, சிகரெட்டை விட்டு விடுவோம்; திரைப்படத் துறையில் முடக்கப்பட்டது எத்தனைக் கோடி? அதையும் முதியோர் மறுவாழ்விற்கும், பொதுக் கழிப்பிடங்களுக்கும் ஒதுக்கி இருக்கலாமே என்ற கேள்வி உடன் வருகிறது. ஜனநாயக முறையில் தேர்தலில் வென்று சட்டங்கள் செய்து ரவிக்குமாரும் அவரது கட்சியினரும் இதற்கெல்லாம் தீர்வு காண்பாராயின் நன்று!
மற்றபடி, மதுவிலக்கின் அவசியத்தைச் சொல்லவரும் ரவிக்குமார், வரலாற்றின் இண்டு இடுக்குகளிலெல்லாம் தேடி, தூசியைத் தூணாக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்.
தவிர, தாழ்த்தப்பட்டோரை அடிமைப்படுத்துவதற்காகக் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதம் தான் மது என்பது போல, அவர் சித்திரிக்கிறார். அது ஒட்டவில்லை. இருந்தாலும், ரவிக்குமாரைக் கட்டாயம் படிக்க வேண்டும்; பாராட்ட வேண்டும்; கள்ளுக்கடைகளைத் திறக்கக் கூடாது என்று குரல் கொடுப்பதற்காக.
‘தாழ்த்தப்பட்ட மக்களைப் பொறுத்தவரை, ‘டாஸ்மாக்’ கடைகளைவிட கள்ளுக் கடைகளே ஆபத்தானவை. ஏனென்றால், கள்ளுக் கடைகள், கிராமங்களின் சேரிகளுக்கு அருகாமையில் தான் அமைக்கப்படும்... விலை குறைவாக இருப்பதால், கள் பழக்கம் வேகமாகப் பரவுவதற்கு வாய்ப்பிருக்கிறது’ (பக். 30) என்கிறார் ரவிக்குமார்.
‘தலித் பண்பாடு என்ற பெயரிலே, தலித் இலக்கியம் என்ற பெயரிலே சிலர், தமிழ்நாட்டிலே குடிப் பழக்கத்தை ஊக்குவித்துக் கொண்டிருக்கிறார்கள். தலித் ஆதரவாளர்கள் போல் தம்மைக் காட்டிக்கொள்ளும் சில சுயநலமிகள் அதை ஊக்குவிக்கிறார்கள்’ (பக்.31) என்கிறார். கள் வேண்டுமா வேண்டாமா என்பதில் தாம் எந்தப் பக்கம் என்பதில், இந்த நூல் தெளிவாக இருக்கிறது.
சுப்பு