வரலாறு படைத்த இந்திய பெண்களின், வாழ்க்கை வரலாறு, இரண்டு நூல்களில் சுருக்கமாக தரப்பட்டுள்ளது. இந்திய வரலாற்றில், ஆங்கிலேயரை தோற்கடித்த முதல் பெண்ணான, வேலு நாச்சியாரில் துவங்கி, ராமநாதபுர மாவட்டத்தின் குடிநீர் பிரச்னையைத் தீர்க்க,
மணிமுத்தாறு அணைத் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி, தீக்குளிப்பு போராட்டம் வரை சென்ற, ரமணி நல்லதம்பி எம்.எல்.ஏ., வரை, மொத்தம், 38 பெண்களின் வரலாறு, இரு பாகத்திலும் இடம் பெற்றுள்ளது.
ஆண்களின் திறம் பாராட்டப்படும் அளவிற்கு, பெண்களின் சாதனைகள் இந்தியாவில் வெளிப்படுத்தப்படவில்லை என்பதற்கு, இந்த நூலில் இடம்பெற்றுள்ள பெண்களே சாட்சி! கடந்த, 1942ல், சுதந்திர போராட்ட செய்திகள், மக்களை சென்றடைவதற்காக, ‘விடுதலைக் குரல்’ என்ற ரகசிய வானொலி நிலையம் அமைத்த, உஷா மேத்தாவின் தீர செயல்கள், நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன. இந்த நூலில் இடம் பெற்றுள்ள அத்தனை பெண்களின் தியாகங்களும் போற்றப்பட வேண்டும்.
சி.கலாதம்பி