‘ஒன்றே குலம்; ஒருவனே தேவன்’ என்று கூறப்பட்டாலும், ஊருக்கு ஊர், குலத்திற்கு குலம் எண்ணற்ற குலதெய்வ வழிபாடு வழக்கத்தில் இருப்பதை யாரும் மறுக்கவியலாது. திருமண பத்திரிகைகளை பிரித்து பார்த்தால், வெவ்வேறு குலதெய்வங்களின் உருவங்கள், பெயர்களை பட்டியலிட முடியும்.
அந்த குல தெய்வங்களின் புராண வரலாற்றை ஆய்வு செய்தால், அவை சார்ந்த மனித இனங்களின் பூர்வோத்தரம் புலப்பட்டுவிடும். சிவன், திருமால், முருகன், பிள்ளையார் என, எவ்வளவு பெருந்தெய்வ வழிபாடுகளை மேற்கொண்டாலும், ‘குலம் காக்கும் சாமிகள்’ எனப்படும் குலதெய்வ வழிபாடுகள் தனிச்சிறப்புடன் கடைப்பிடிக்கப்படுவதே நிதரிசனம்.
இதில் பலவகை உண்டு. குடும்ப மானம் காக்க தீயில் இறங்கி உயிர்விட்ட தீப்பாய்ந்த நாச்சியம்மன், வெள்ள அழிவுகளிலிருந்து ஊரைக் காக்க உயிர் பலி தந்த கர்ப்பிணிப் பெண்ணான உருப்படியம்மன், நடுகல் வழிபாடுகள் என, ஒவ்வொன்றிற்கும் ஒருகதை உண்டு. சில புராணப் பின்னணி கொண்டவையாகவும் அமையும்.
அப்படி தேவாங்கர்குல மக்களின் குலதெய்வமான ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் பற்றியும், இதர தெய்வ வழிபாடுகள் பற்றியும், கன்னட வரலாற்றுத் தொடர்புடைய தேவாங்கர் குலம் தமிழகத்தில் குடியேறி வாழும் வரலாறு பற்றியும், மிக நுட்பமாக, ஆழமாக ஆய்வுகள் மேற்கொண்டு, இந்த நூலை எழுதியுள்ளார் கவிஞர் பாப்ரியா.
விஜயநகரப் பேரரசு காலத்தில் தமிழகம் வந்த இனம் தேவாங்கர் இனம் என்றாலும், அதற்கு முந்தைய ஆயிரம் ஆண்டுக் கால களப்பிரர் ஆட்சிக் காலத்தோடும் தொடர்புப்படுத்தி, நிறைய செய்திகளை விவரிக்கிறார்.
ஆடையின்றித் திரிந்த ஆதிவாசி மனிதனும், மூவுலகத் தேவர்களும் அணிந்து மகிழ ஆடையும், அதற்கான நூலும் கொணர தேவல மகரிஷி, பரப்பிரம்மத்திலிருந்து அவதரித்த வரலாறு சுவாரசியமாக உள்ளது.
பண்பட்ட ஆய்வு நோக்கில் சங்க இலக்கிய, புராண ஆதாரங்களுடன் எழுதப்பட்டுள்ள இதுபோன்ற நூலில், ஆய்ச்சியர் குரவை என்பது, ‘ஆசிரியர் குரவை’ (பக்.24) கேதார கவுரி விரதம் என்பது, ‘கோதார’ என்று பக்.102லும், திருஞான சம்பந்தரின் திருமயிலாப்பூர் பதிகம் என்பது, ‘திருமலை’ என்றும் (பக்.90) காணப்படுவது நெருடலாக உள்ளது.
கவுதம நீலாம்பரன்