நூல் துவக்கத்திலேயே, ‘விராட் விஸ்வப் பிரம்மம்’ என்ற முழுமுதற்கடவுளைப் பற்றிய விளக்கத்தைத் தந்திருக்கிறார் ஆசிரியர். அது ஆணுமல்ல; பெண்ணுமல்ல; இரண்டிற்கும் பொதுவான அலித்தன்மையில் அமைந்தது. அந்தப் பிரம்மத்திலிருந்து, ஐந்துவித பருவ காலமும் ஒருங்கே சேர்ந்தபோது, உலகின் முதல் ஆண்மகன் என்று பிறந்தவர் விஸ்வகர்மா. அதேபோல், அந்தப் பிரம்மத்திலிருந்து ஜனித்த முதல் ஒரே பெண், விஸ்வகர்மிணி எனும் ஸ்ரீகாயத்ரி. இந்த இருவரும் இணைந்து, இவர்கள் மூலம் ஐந்து ஆண் (பிரம்மன், விஷ்ணு, பரமசிவன், இந்திரன், சூரியன்), ஐந்து பெண் (சரஸ்வதி, லட்சுமி, பார்வதி, இந்திராணி, சவிதா) படைக்கப்பட்டு, அவர்கள் மூலம் பிரபஞ்சத்தில் இனப்பெருக்கம் ஏற்பட்டுப் பெருகியதாக நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.
‘விஸ்வகர்மா’ என்பதன் பொருள், விஸ்வம் என்றால் விஸ்வநாதன் – சிவபெருமான்; கர்மா என்றால் பணி – விஸ்வநாதனுக்குப் பணி செய்கிறவர்களின் பெயர் விஸ்வகர்மாக்கள். அவர்கள் தச்சுவேலை, தங்கவேலை, இரும்பு வேலை, பாத்திர வேலை, சிற்ப வேலை என்று எந்த வேலை செய்பவர்களாக இருந்தாலும், அவர்கள் அனைவருமே விஸ்வகர்மாக்களே. அவர்கள், முப்புரி நூல் அணிந்தே அந்த பணிகளை செய்ய வேண்டும் என்பது இறைவனின் கட்டளை. அவர்களின் பணி பற்றி, பக்தி பற்றி, வாழ்க்கை பற்றி தெளிவாக எடுத்துக்
கூறுவது தான், இந்த நூல்.
இந்த நூல், ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொன்றை விளக்குவதாக அமைந்துள்ளன. வேதம், புராணம், ஆகமம், சாஸ்திரங்களில் அமைந்துள்ள ஸ்ரீவிஸ்வகர்மன், ஸ்ரீகாயத்ரியின் கருத்துக்களை ஒருவரிச் செய்திகளாக முதற்பகுதியில் விளக்குகிறார்.
இரண்டாம் பகுதியில், 1,350 தலைப்புகளில் பஞ்ச தேவர், பஞ்ச தேவியர், பஞ்ச ரிஷிகள், பஞ்ச வேதங்கள், பஞ்ச கிருத்தியம், பஞ்ச அங்கம் போன்ற பஞ்சபூத நிலைகளை விவரிக்கிறார். மூன்றாம் பகுதி முழுவதும், நம்மைச் சுற்றி ஸ்ரீபரப்பிரம்மம் எவ்வாறு செயல்புரிகிறது என்பதன் விளக்கம் (430 தலைப்புகளில்). நான்காம் பகுதியில், 1077 அரிய ஆன்மிகச் செய்திகளை திரட்டி தந்திருக்கிறார். ஐந்தாம் பகுதி, ஆன்மிகப் பட விளக்கங்கள் கொண்டது.
ஏறத்தாழ 30 ஆண்டுகள் மிக முயன்று, இந்த நூலை ஆசிரியர் எழுதியிருப்பதாக தெரிகிறது. பாராட்டப்பட வேண்டிய முயற்சி இது.
மயிலை சிவா