‘விவேக சூடாமணி’ என்ற சொல் விவேகத்தைத் தந்து உயிர்களை உய்விக்கும் நூல்களுள் மணிமுடியான நூல்’ என, பொருள்படும். 582 சுலோகங்களால், ஆதிசங்கரர் இயற்றிய இந்த நூலை, ரமண மகரிஷி தமிழில் மொழிபெயர்த்தார். அவரது மொழிபெயர்ப்புக்கு, விளக்க உரை தான் இந்த நூல்.
பிரம்மஞானம் சித்திக்க தேவையான நான்கு சாதனங்கள், அண்டத்திலும் பிண்டத்திலும் உள்ள பஞ்சபூத அமைப்பு, பத்து வகை வாயுக்கள், முக்குணங்கள், ஐந்து வகை கோசங்கள், ‘நான் என்ற சொல்லுக்கு உண்மைப் பொருளாய் விளங்கும் ஆன்மா’ (பக்.24), இதய நடுவில் ஜாடராக்னியில் ஒரு நெல்லின் முனையின் உள்ள ஒரு அணுவில் பரமாத்மா இருப்பது (பக்.27), என, பல தத்துவங்கள் கேள்வி, பதிலாக விளக்கப்பட்டுள்ளன.
திருக்கு (காண்பது) திருசியம் (காணப்படும் பொருள்) எனும் இவை இரண்டின் உண்மை நிலையை விளக்குவதால், ‘திருக்கு திருசிய விவேகம்’ என, பெயர் பெற்ற நூல், இதில், இரண்டாம் இணைப்பாக கொடுக்கப்பட்டுள்ளது. பகவான் ரமணர், ‘உத்தம அதிகாரிகள் ஆத்ம சாக்ஷாத்கார மெய்த இச்சிறு கிரந்தம் ஒன்றே போதுமானது’ (பக்.256) என்பார்.
பின்னலூரான்