முக்கடல் சங்கமம் ஆகும் குமரி மாவட்டத்து கிராமக் கோவில்களில் நடக்கும் வில்லுப்பாட்டை, மிக விரிவாகக் கள ஆய்வு செய்கிறது இந்த நூல். வன்கொலை செய்யப்பட்டு தெய்வம் ஆக்கப்பட்ட நாட்டார் தெய்வங்களின் ஆறு கதைகள், ஆய்வு செய்யப்பட்டு, அதன் வழி வரலாறு, பண்பாடு, சமூகச் சூழல் ஆராயப்பட்டுள்ளன. கலப்பு மணமும், அதனால் எழும் சிக்கல்களும் முத்துப்பட்டன் கதை, மதுரைவீரன் கதை, சின்ன நாடான் கதையில் சொல்லப்படுகின்றன.
ஜாதீய அடக்குமுறை, மேல் ஜாதிக்காரர்களின் அடக்குமுறைகளை சின்னத் தம்பி கதையும், தந்தை வழி, தாய் வழி குடும்ப மண உறவுச் சிக்கல்களை தோட்டுக்காரி அம்மன் கதை, வெங்கலராஜன் கதையும் சொல்கின்றன. நல்லதங்காள் கதையால் பெண்ணுக்குச் சொத்துரிமை மறுப்பும், கவுதலமாடன் கதையில் ஜாதி மதம் கடந்த மனிதாபிமானமும் சொல்லப்படுகின்றன.
வில்லுப்பாட்டின் கதைப் பாடல்களின் நோக்கும், போக்கும், அது எழுந்த சமூகச் சூழலும், தெய்வ வழிபாடும், விரிவாக ஆராயப்பட்டுள்ளன. நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களே வில்லுப்பாட்டின் விளை நிலமாக இன்றும் உள்ளதை, ஆய்வு உறுதி செய்கிறது.
வில்லுப்பாட்டின் போது சாமியாடிகள் கூடவே ஆடுவதும், கேள்விகள் கேட்பதும், களிவெறி தூண்ட முரசு, சேகண்டி, மணிகள், சங்குகள், தாளங்கள் முழங்குவதும் அழகாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. அலையும் ஆவிகள் பற்றியும், நல்ல சாவு, கெட்ட சாவு பற்றியும், ஆவி பழிவாங்குதல் பற்றியும், இந்தோனேஷியா, கொரியா நாடுகளுடன் ஒப்பிட்டு, ஆவி குறித்த ஆய்வும் செய்யப்பட்டுள்ளது.
பிச்சைக்காலன் வில்லுப்பாட்டில், அவன் ஆளாக நின்று செய்ய முடியாததை ஆவியாக வந்து முடிக்கிறான். மாடன், காடன், வேடன், இசக்கி, பேச்சி வணங்கப்படுகின்றனர். பாவம் செய்பவருக்கு பிள்ளை பிறக்காதென, ‘ஆரை அடித்தோமோ, அநியாயம் செய்தோமோ, பிச்சைக்கு வந்தவரை பின்னே வரச் சொன்னோமோ, நெல்லில் பதரைக் கலந்தோமோ, அநியாயம் செய்தோமோ’ என்று வில்லு பாடுகிறது. வீரமிகு சாமிகளின் கதைகளை, வில்லுப்பாட்டு தலையாட்டி தாளமுடன் சொல்கிறது.
முனைவர் மா.கி.ரமணன்