இந்த நூல் தென்னிந்தியாவின் கடைசியில் உள்ள திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த பயங்கர சம்பவத்தை மறுபார்வையாக காட்டுகிறது. மன்னர் மார்த்தாண்ட வர்மா காலத்திய கேரளாவை, நாடக பாணியில், எளிய ஆங்கிலத்தில் அணுகுகிறார் நூலாசிரியர். 150 ஆண்டுகளுக்கு முன், கேரளாவில் கிறிஸ்தவ மதப் பிரசாரம் எப்படி ஆழங்கால்பட்டது என்பதை, இந்த நூல் வெளிப்படையாக விவரிக்கிறது.
ஆங்கில நூல் என்பதால், இதை மலையாளம் மட்டும் அதிகம் தெரிந்த மக்களும், தமிழகத்தில் நாஞ்சில் நாட்டை சேர்ந்த தமிழர்களும் படித்திருக்க வாய்ப்பில்லை. மன்னர் மார்த்தாண்ட வர்மா சபையை அலங்கரித்த, மாவீரன் நீலகண்டன் பிள்ளை, டச்சு கப்பற்படை தளபதி டிலனாய் மூலம், தேவசகாயம் பிள்ளையாகி, அதனால் மன்னர் கோபத்திற்கு இலக்காகி, மரண தண்டனை பெற்றார். இது தான் இந்த நூலின் மைய கரு.
வடக்கன் குளத்தில் தமிழராக இருந்து கிறிஸ்தவரான பாதிரியாரிடம், ஞானஸ்நானம் பெற்ற தேவசகாயம், தன் மனைவி பார்கவியை, ‘ஞானப்பூ’ என்று மாற்றி, அவர் படித்த சிவதோத்திர ஓலையை விலக்கிய விதம், கணவர் சொல்லை மந்திரமாக கருதி, மனவருத்தத்துடன் அவர் மாற்று மதம் தழுவிய விதம் விவரிக்கப்பட்டுள்ளது.
வடக்கன் குளத்தில், ‘பாதர் புட்டாரி’ என, தன் பெயரை மாற்றி கிறிஸ்தவ பாதிரியாரான பரஞ்சோதி சாமியார், தேவசகாயத்திடம் கூறும் தகவல்கள் இன்றும் சிந்திக்கத்தக்கவை. ‘இங்குள்ள இந்துக்கள் நாகப்புற்றை வணங்குவோர். அவர்களை ராபர்ட் டி நொபிலி, சாமியார் ஜான் பிரிட்டோ ஆகியோர் பாதைப்படி ஜபமாலை கொடுத்து கிறிஸ்தவர்களாக்கினோம்.
இந்து மத சடங்கான தகனம், அவர்கள் மதம் மாறிய பின்னும் கடைபிடிக்க அனுமதிக்கப்பட்டது’ என்கிறார், பாதிரியார்.
அதேநேரம், அந்தணர்களை அவமதிக்கும் வழக்கம், அவர்கள் அரசுடன் கொண்ட நெருக்கம், அந்தணர்கள் தாழ்த்தப்பட்டோரை நடத்திய விதம், சிவ வழிபாட்டை கேலி செய்யும் விதம் உட்பட பல விஷயங்கள், இதில் பதிவாகி உள்ளன. சமூக, கலாசார நடைமுறைகளை பிரதிபலிக்கும் இந்த நூல், இந்திய மன்னர்கள் மாற்று மதத்தினரை மதித்து ஏமாந்த விதத்தையும் படம் பிடிக்கிறது. சமூக வெறுப்பை விதைக்கும் களனாக இந்தக் கதையில் சில கருத்துக்கள் உள்ளன என்பதை எளிதில் மறைக்கமுடியாது.
– பாண்டியன்