பத்துப் பாசங்களை உணர்த்தும் பத்துச் சிறுகதைகளின் தொகுப்பு. பிள்ளைப் பாசம், தாய்ப் பாசம், வளர்த்த பாசம், நழுவும் பாசம், பொய்ப் பாசம், கோ பாசம், சகோதரிப் பாசம், ஏழையின் பாசம், குடும்பப் பாசம், பழகிய பாசம் என்னும் இந்தப் பாசங்களின் அணிவகுப்பாகப் படைத்துள்ளார், நூலாசிரியர்.
வளர்த்த பசு, பால் வற்றிப் போனதும் அதை அடி மாட்டுக்கு விற்க நினைக்கும் கணவனை ஏமாற்றுகிறாள், அவன் மனைவி சியாமளா. லட்சுமி என்ற அந்தப் பசுவை விற்று விட்டதாகக் கூறி, தனது சேமிப்பிலிருந்து, 2,000 ரூபாயை எடுத்துக் கொடுத்துவிட்டு, கணவனுக்குத் தெரியாமல் அதைக் கோசாலைக்கு அனுப்பி வைத்து, தனது கோ பாசத்தைக் காட்டுகிறாள். இதைப் போன்று ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு கருத்துப் பதிவை முன் வைக்கின்றன.
‘நாள் முழுவதும் மாடாய் உழைத்ததினால் வந்த களைப்பினைப் போக்க முதலில் கொஞ்சமாகக் குடிக்க ஆரம்பித்த சின்னா, காலப்போக்கில் முழு குடிகாரனாகவே மாறிவிட்டிருந்தான். சம்பாதிக்கும் பணம் அத்தனையும் குடிப்பதற்கே போதுமானதாயிருந்தது’ (ப.97).
முகிலை இராசபாண்டியன்