‘கோயில்’ என்றால் வைணவர்களுக்கு திருவரங்கம் தான். திருவரங்கத்தில் பள்ளிகொண்டுள்ள அரங்கநாதன் இருகண்களாக இரு வைரங்கள் பதியப்பட்டு இருந்ததும், அவை திருடு போன வரலாறும் பலரும் அறியாததது. கடந்த, 17ம் நூற்றாண்டில் முஸ்லிம்கள், ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்களின் தொடர் படையெடுப்புகளால் தென்னகம் பாதிக்கப்பட்டது. கோயில்கள் கொள்ளையடிக்கப்பட்டன. அப்போது அரங்கனின் இருகண்களாக பதியப்பட்டிருந்த இரண்டு பெரிய வைரங்களும் கொள்ளை போயின. அதிலொன்று ரஷ்யாவின் ராணியான கேதரினின் செங்கோலில் பதியப்பட்டு, இப்போது கிரெம்ளின் அருங்காட்சியகத்தில் உள்ளது (பக்.174). அதே அளவும் எடையும் கொண்ட மற்றொன்று இங்கிலாந்து ராணியின் கிரீடத்தில் உள்ள கோஹினூர் வைரமாக இருக்கலாம் என்கிறது இந்த நூல்.
திருவரங்க தலவரலாறு, கோயில் மீது நடந்த அன்னிய படையெடுப்புகள், தாக்குதல்கள், அரங்கனை காக்க அடியார்கள் செய்த தியாகம், அரங்கனின் அஞ்ஞாதவாசம் என திருவரங்கம் பற்றி ஏராளமான தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் அடங்கிய நல்ல நூலிது.
திருநின்றவூர் ரவிக்குமார்