வசீகர மர்மமும், ஈர்ப்புத்தன்மையும் கொண்டவை, துருக்கி எழுத்தாளர் ஓரான் பாமுக்கின் எழுத்துக்கள். அவர் எழுதிய ஆரம்பகால நாவல்களில் ஒன்று இந்த நூல். துருக்கியில் உள்ள இஸ்தான்புல், அதைச் சுற்றியுள்ள கடற்கரைப் பகுதிகள் தான் கதைக்களம். 17ம் நூற்றாண்டின் பின்னணியில், துருக்கிக் கப்பற்படை, வெனிஸ் நகரிலிருந்து வரும் ஒரு கப்பலை வழிமறித்து, அதில் உள்ளவர்களைப் பிடித்து அடிமையாக்குவதில் தொடங்குகிறது இந்நாவல். மனித மனதின் உணர்வுகளில் எழும் கொந்தளிப்புகள், குழப்பங்கள், தெளிவுகளே
உரையாடல்களாக நிகழ்கின்றன. அடிமையாக்கப்பட்ட மனதின் முன் எழும் கேள்விகள், கேட்கப்பட முடியாமல் மவுனத்தில் ஆழ்த்தி உணர்வுக் குலைவை ஏற்படுத்துகின்றன. அந்த குலைவு, வாசிக்கிறவர்களின் மனதிலும் ஆழப் பரவுகிறது.
இஸ்தான்புல் நகரின் பண்பாடு, வரலாறு ஆகியவை கதையின் விவரணை ஊடாகவே சொல்லப்படுகின்றன. இந்நாவலின் மொழிபெயர்ப்பாளர் ஜி.குப்புசாமி பாராட்டுக்குரியவர்.
பொன்.வாசுதேவன்