இசை கேட்டு மகிழ்வர் பலர்; இசையாகவே வாழ்ந்தவர் சிலரே. அச்சிலரில், இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி குறிப்பிடத்தக்கவர். இந்த நூல் அவர் வாழ்க்கை வரலாற்றை விவரிப்பதுடன், அவர் பண்பு நலன்களையும் மிக நேர்த்தியாக விவரிக்கிறது.
எட்டு வயதில் முன்னறிவிப்பின்றி அரங்கேற்றமான எம்.எஸ்.,சின் மேடைக்கச்சேரி (பக்.35), எம்.எஸ்.,சின் முதல் இசைத்தட்டுகளை எச்.எம்.வி., நிறுவனம் வெளியிட்டது (பக். 41), சென்னை மியூசிக் அகாடமியில் 1932ம் ஆண்டு, அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் பாட வேண்டிய நிகழ்ச்சியில் எம்.எஸ். பாடி, அனைவரின் பாராட்டுகளையும் பெற்றது (பக். 52), திரைப்படங்களில் எம்.எஸ். நடிக்க, இயக்குனர் கே.சுப்பிரமணியம் கொடுத்த ஆதரவும், ஊக்கமும் குறித்த செய்திகள் (பக். 60), சதாசிவத்தை, எம்.எஸ். 1940ம் ஆண்டு மணந்தது (பக். 70) ஆகிய செய்திகள் குறிப்பிடத் தக்கவை.
காந்தி, 1944ல் எம்.எஸ்., சுக்கு எழுதிய கடிதம் (பக். 92), மீரா திரைப்படம் தொடர்பான விவரங்கள், கல்கி கார்டனை வாங்கிய போதும், அதை விற்கும் சூழ்நிலை வந்த போதும், எம்.எஸ்.,சின் மனநிலை சமமாக இருந்தது குறித்த செய்திகள் (பக். 203), ஆகியவற்றை படிக்கப் படிக்க
எம்.எஸ்., நம் மனதில் இமயம் போல் உயர்கிறார். இந்த நூலில் உள்ள எம்.எஸ்., புகைப்படங்களும், அவர் பாடிய திரைப்பாடல்கள், பெற்ற உயரிய பட்டங்கள் குறித்த விவரங்களும் நூலுக்கு மேலும் சிறப்பளிக்கின்றன. அருமையான நூலைத் தந்த, நூலாசிரியர் பணி, மிகவும் போற்றத்தக்கது.
- டாக்டர். கலியன் சம்பத்து