வயது வரம்பின்றி அனாயாசமாக எல்லாரும் பயன்படுத்துவது ‘சும்மா’ என்ற சொல். மடைமையாக ஏதாவது செய்து, மிகச் சாதாரணமாக ‘சும்மாதான் செய்தேன்’ என்று சொல்லும் பலரை நாம் பார்த்திருப்போம். உங்களுக்கு தெரியுமா? மலாய் மொழியிலும் அந்த வார்த்தையை அப்படித்தான் சொல்வார்கள். ஆனால், உச்சரிப்பில் மட்டும் சிறிய மாற்றம். அவர்கள் ‘சுமா’ (Cuma) என்று சொல்வார்கள்.
Cuma என்றால், ‘அது மட்டும்தான்’ என்று அர்த்தம். அதுவே ‘பெர்சுமா’ (percuma) எனும் போது, ‘இலவசம்’ என்று பொருளாகிறது. இலவசத்தை நாம், ‘சும்மா’ என்றும் அழைப்போம் இல்லையா? மலாய் மொழியில் ஒரே வார்த்தை, ஒரே அர்த்தம் கொண்ட சொற்களும் இருக்கின்றன. உதாரணத்திற்கு சாட்சி என்ற சொல் மலாய் மொழியில் ‘சக்ஸி’ (saksi) என்று அதே அர்த்தத்தோடு பயன்படுத்தப்படுகிறது. இப்படி, 500 வார்த்தைகளை அடையாளம் காட்ட முடியும்.
இதுகுறித்து, கோலாலம்பூர் ஸ்ரீகோத்தா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் க.கந்தசாமி, எழுதியுள்ள நூல் தான் இது. மலாய் மொழியில் அதிகம் பயன்படுத்தப்படும் மலாய் வார்த்தைகள், தமிழின் தழுவல் என்பதை, மிக எளிய மொழிநடையில், ஆதாரங்களுடனும், தெளிவான விளக்கங்களுடனும் பதிவு செய்திருக்கிறது இந்த நூல்.
நூலில், ‘சொற்கள் கூறும் வரலாறு’ எனும் தலைப்பில், 112 மலாய் சொற்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவை எவ்வாறு தமிழ் சொற்களோடு, பொருள் அளவில் பொருந்திப் போகின்றன என்பதை நேர்த்தியாக விளக்குகிறது. குறிப்பாக மீசை, முகம், காரணம், சமம், தருமம், புரளி, மனிதன், பவுர்ணமி, கூலி, ரகசியம் உள்ளிட்ட வார்த்தைகள், மலாய் மொழியில் அதே அர்த்தத்தோடு மலாய்க்காரர்களின் புழக்கத்தில் இருப்பதாக நூலாசிரியர் சுட்டிக் காட்டுகிறார்.
நூலாசிரியர், பணியில் இருந்த போது, மலேஷியாவில் வெளிவந்து கொண்டிருந்த, ‘தென்றல்’ வார இதழில் தொடராக எழுதினார். பின், அதை நூலாக்கினார். தற்போது இரண்டாம் பதிப்பு வெளிவந்துள்ளது.
மலாய் மொழியின் வளமைக்கும் செழுமைக்கும் தமிழ்ச் சொற்கள் ஆற்றிவரும் பங்கு குறித்து, வெளியுலகிற்கு முழுமையாகத் தெரியாமல் போய்விட்டதாக, நூலாசிரியர், ஆதங்கம் தெரிவித்துள்ளார். இந்த நூலில், சிலப்பதிகாரம், திருக்குறள், தொல்காப்பியம், நன்னூல், கண்ணதாசன், பாரதி, பாரதிதாசன் பாடல்கள் ஆகியவற்றில் இருந்து, நூலாசிரியர் மேற்கோள்கள் காட்டிஉள்ளார்.
– யோகி