சிறுகதைத் தொகுப்பான இந்த நூலில், 15 கதைகள் உள்ளன. அவற்றில், ‘சுமையென்று நினைத்து’ என்ற சிறுகதை சிறந்த கதை. கஷ்டப்பட்டு குடும்ப வண்டியை ஓட்டிக்கொண்டு போகும் அப்பா, உதவ வேண்டிய மகன், குடும்ப பாரத்தை உதறிவிட்டுப் போய் விடுகிறான். சிரமப்பட்டு மகளுக்கு திருமணம் செய்து வைக்கிறார் தந்தை. பல ஆண்டுகள் கழித்து வீடு திரும்பும் மகன், தன் தங்கைக்குப் பெரிய பரிசுத் தொகை அளிக்கிறான். தங்கையின் கல்யாணத்திற்கு உதவாதவன், தங்கை மகளின் கல்யாணத்திற்கு உதவுகிறான்.
ஒரு சிறுவனுக்கு உதவ, ஒரு ராணுவ வீரன், அபாயச் சங்கிலியை இழுத்து ரயில் வண்டியை நிறுத்தும், ‘இரக்கம்’ என்ற கதையும் அருமை. வில்லவன் கோதை, அருமையாக கதை சொல்கிறார். வர்ணனை, கதை சொல்லும் பாங்கு எல்லாம் கச்சிதம். அநாவசியமாக ஒரு வார்த்தை கூட அதிகமில்லை. வார்த்தைச் சிக்கனக்காரர். வாசிக்கச் சுவையாக இருக்கின்றன அவரது கதைகள். வாசகன் எவ்விதச் சிரமமும் இன்றி, கதாநதிக்குள் பாய்ந்து, நீச்சலடித்து கரையேறிவிட முடியும்.
எஸ்.குரு