அகத்தியம் முதல் இலக்கண நூல் இன்று அகப்படவில்லை. எனவே, தமிழின் முதல் இலக்கண நூலானது தொல்காப்பியம். அகத்தியரின், 12 மாணாக்கரில் தலைமை சான்றவர் தொல்காப்பியர். இவரது இடம், காலம் பற்றிய வரலாறு, ஆய்வுக்கு உரியதாகவே உள்ளது.
மதுரையில், நிலந்தரு திருவின்பாண்டியன் அவையில், அதங்கோட்டு ஆசான் தலைமையில், ‘தொல்காப்பியர் அரங்கேற்றம் செய்தார். அதனால், ‘அதங்கோடு’ பகுதியில் வாழ்ந்தவர். ‘அதங்கோட்டு ஆசான்’ என்றும், ‘காப்பிக்காடு’ என்ற ஊரில், தொல்காப்பியர் பிறந்தார் என்றும் இந்த நூல் ஆய்ந்து சொல்கிறது.
பூசை, குட்டி, நாயி, பூந்தை, தள்ளை ஆகிய வட்டார வழக்குச் சொற்களை வைத்தும், குமரித் தமிழன் தொல்காப்பியன் என்ற முடிவுக்கு வருகிறார். ‘தொலைந்து போனதை பறியாற்றில்லா போட்டாய்?’ என்று சொல்வதன் மூலம், பக்றுளி ஆறு, குமரி மக்களால் இன்றும் பேசப்படுகிற சான்றாகக் காட்டுகிறார்.
ஆவணியே, ஆண்டின் தொடக்கம் என்றும் கூறுகிறார். ஆய்வு நூலின் நடுவே, திடீரென இவர் கவிதையும் பாடுகிறார். இது, திரைப்படத்தின் நடுவே பொருத்தமற்ற பாட்டாக ஒலிக்கிறது. தொல்காப்பியரை குமரிக்குச் சொந்தமாகக் காட்டும் நூல்.
முனைவர் மா.கி.ரமணன்