பள்ளிப் பருவத்தில் உதித்த கற்பனைகளை தொகுத்தளித்துள்ள இந்நூலாசிரியருக்கு வார்த்தை வரம் நன்றாகவே கைவரப் பெற்றுள்ளது. சிவாவின் பால்ய பருவத்திலிருந்து எழுதப்பட்ட கவிதைகள் எனினும் குறிப்பிடத்தக்க நல்ல கவிதைகள் இந்நூலில் விரவிக் கிடப்பதை மறுப்பதற்கில்லை.
அதற்கு, ‘தினமலர்’ எனும் தலைப்பில் உள்ள கவிதையை முன்னுதாரணமாக கூறலாம். இள மொட்டில் இருப்பதெல்லாம் பூக்களல்ல; பதினெட்டில் வருவதெல்லாம் காதலல்ல என, இரண்டே வரிகளில் காதலுக்கு வரையறையே வகுத்துவிட்டார்.
இந்நூல், தமிழ், நிலவு, காந்தி, நேரு, தாய்மை, கும்மிப்பாட்டு என, பல்வேறு தளங்களில் கவிதைகளைக் கொண்டு, வாசிப்பாளர்களுக்கு நல்ல அனுபவங்களை கடத்தும் திறத்துடன் உள்ளது.
– மாணிக்கம் பிள்ளை