முதுகலையில் கால்நடை மருத்துவம் பயின்ற டாக்டர் ந.பன்னீர் செல்வம், எழுதிய நூலின் முதல் தலைப்பு வாரணம் ஆயிரம் என்பதாகும். மொத்தம், 18 தலைப்புகளில், வன விலங்குகளுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
தன் பணிக் காலத்தில் மனிதர்களை விட விலங்குகளுடன் அதிக நேரம் செலவிட்டவர். இந்தப் புத்தகம், உயிரியல் பூங்காக்களில், வன விலங்குகள் மருத்துவம், பராமரிப்பு தொடர்பாக பல செய்திகளைக் கூறியுள்ளது.
ஆசிரியர் பெற்ற அனுபவங்களைப் படிக்கும்போது, மேலும் மேலும் படிக்கத் தூண்டுகிறது. விலங்குகளைப் பற்றிக் கூறும் நூலில் முதல் தலைப்பே யானையைப் பற்றியதாகும். யானை, கடவுளின் வடிவம் என்பதால் முதல் கட்டுரையாக அமைந்துள்ளது போலும்.
யானைகளுக்கு போதிய உடற்பயிற்சி இல்லாமை மற்றும் போதுமான இனப்பெருக்க வாய்ப்புகள் இல்லையென்றால், யானைக்கு அடிக்கடி மதம் பிடிக்க வாய்ப்பு அதிகம் உள்ளது (பக்., 22).
குழுக்களைப் பாதுகாக்கும் கடமையில் ஈடுபட்டுள்ள ஆண் சிங்கம், பெண் சிங்கம் வேட்டையாடச் செல்லும்போது, குட்டிகளைப் பராமரிப்பதுடன் தானும் சில சமயங்களில் வேட்டையாடச் செல்லும். இவ்வாறு சிங்கம், புலி, கரடி, குரங்குகள் இவற்றைப் பராமரிக்கும் போதும், மருத்துவம் பார்க்கும் போதும் ஏற்பட்ட திகிலூட்டும் அனுபவங்களை ஆசிரியர் விவரிக்கிறார்.
இமாலயக் கறுப்புக் கரடிகள் மனிதர்களைத் தாக்கக் கூடியன. தன் பணிக்கால அனுபவத்தை விளக்குமிடத்து, தன் அனுபவத்தை விளக்குகிறார்.
வன விலங்கு மருத்துவர், பன்னீர் செல்வமே பேசுகிறார்: ஒரு நாள் நான் என் மருத்துவமனையில் அமர்ந்து இருந்தேன். திடீரென, ராம்பால் என்ற பராமரிப்பாளர், விலங்குகள் வைக்கப்பட்டிருக்கும் இடத்திலிருந்து ஓலமிட்டு அலறினார். அங்கு சென்ற நான், ஒரு நிமிடம் திகைத்து விட்டேன். காரணம், கரடியின் கூண்டைச் சுத்தப்படுத்துவதற்காகச் சென்ற, ராம்பாலின் கையைப் பிய்த்து தனியே எடுத்து, கரடி தின்று கொண்டிருந்தது (பக்., 86).
ராஜநாகம், 18 அடி நீளம் வரை வளரும். இந்தப் பாம்பை கையில் பிடித்து, படத்துடன் விளக்கியிருப்பது அருமையிலும் அருமை. உயிரியல் பூங்காவில் வளரும் ஊர்வன, நடப்பன, பறப்பன ஆகியவற்றைப் பற்றி இந்நூல் விரிவாக விளக்குகிறது.
விலங்குகளுக்கு ஏற்படும் நோய்கள், இனப்பெருக்கம், உணவு முறை முதலியவற்றை, நேரில் கண்ட அனுபவத்தோடு சுவைபட எழுதியுள்ளார். ஆசிரியர் இந்த நூல் குறிப்பிடும் அனைத்து விபரங்களும், ஒவ்வொரு உயிரியல் பூங்காவின் மேலாண்மைக்கு தேவைப்படும். நூலைப் படிக்கத் துவங்கியவுடன், நூலை கீழே வைப்பதற்கு மனம் வராது.
- பேராசிரியர் முனைவர் ரா.நாராயணன்