வழு வழு தாளில் உருவான அழகான ஆங்கில நூல். ரயில்வே உருவான விதம், அதை பிரிட்டிஷ் ஆட்சி சட்ட நடைமுறைகளுடன் நிர்வகித்தது, மலைப்பாதைகள், பெரிய ஆறுகளின் மீதான ரயில் பாதைகளை உருவாக்கிய விதம் என்று பல விஷயங்களை, உரிய ஆவணங்களுடன் ஆசிரியர் தயாரித்திருக்கிறார்.
ரயில்வே ஆவணங்களை எளிதாக எடுத்து சேர்த்து, புரிய வைத்தது பெரிய முயற்சியாகும். இதற்கு ரயில்வே போர்டு அதிக ஒத்துழைப்பை தந்திருப்பதால், ‘மோடி ரயில்வே புக்’ என்று அவர் குறிப்பிட்டிருப்பதில் ஏதும் பின்னணி கிடையாது.
ரயில்வே பாரம்பரியத்தை அறிந்த ஆசிரியர் இதில், 40 ஆண்டுகள் உயர் பொறுப்பில், பணிபுரிந்தவர் என்பதும், 90 அகவைகளை கடந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ரயில்வே பட்ஜெட் தனியாக இல்லை என்பதும், பாதுகாப்பான பயணத்திற்கான சாதனம் என்பதுடன், வசதியான பயண சாதனமாக மாற்ற, அரசு விரும்பும் நேரத்தில், இந்த நூல் பழைய வரலாற்றை அறிய விரும்பும் அனைவருக்கும், மகிழ்வைத் தரும்.
அதிலும் பிரிட்டிஷார் காலத்தில் இருந்த ரயில் இன்ஜின்கள், பெட்டிகள், சில இடங்களின் பொலிவு ஆகியவை வண்ணப்படமாக மிளிர்கின்றன.
முதலில் ரயில்வே ஏன் தேவை என்பதை வெள்ளைய அதிகாரி டி.வில்லியம்ஸ் என்பவர் லண்டன் தலைமையகத்திற்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
அதில், ‘தகவல் தொடர்பு சாதனம் பிரிட்டிஷ் அரசுக்கு தேவை. வடகிழக்கு போன்ற பகுதிகளில், கலவரம் போன்றவை ஏற்படாமல் இருக்க முக்கிய பகுதிகள் இணைப்புக்கு ரயில்வே உருவாக்கப்பட்டது’ என்ற கருத்து (பக்கம் 169) உள்ளது. மேலும் அன்றைய டெண்டர் நடைமுறை, ரயில்வே தொழிலாளர்கள் பெற்ற சம்பளம், மலைப்பாதைகளை தயாரிக்க மேற்கொண்ட முயற்சிகள் ஆகிய அனைத்தையும், ஒரு சேர இந்த நூலில் காணலாம்.
மிகச்சிறந்த வரலாற்று ஆவணம் என்றால் தவறு இல்லை.
– கிருபா