உலகப்புகழ் திரையுலக மேதை, சார்லி சாப்ளின் ஒளிவு மறைவு இன்றி எழுதிய சுயசரிதை நூலை தமிழாக்கம் செய்திருக்கிருக்கிறார், யூமா வாசுகி.
இளமைப்பருவத்தில் கந்தல் உடுத்தி, ஒரு ரொட்டித் துண்டுக்கும் ஏங்கி, தன் கடுமையான உழைப்பால், உலகத் திரையுலகின் உச்சத்துக்கு உயர்ந்த, சாப்ளினின் இளமைப் பருவம் மிகவும் சோகமானது.
நாடக நடிகருக்கு மகனாகப் பிறந்த, சார்லி சாப்ளின் ஒரு செருப்புத் தொழிலாளியின் பேரன், ஒரு வயதிலேயே தந்தை பிரிந்து போக, அண்ணனுடன் கொடுமையான ஏழ்மையில் உழன்று, தாயை மனநல விடுதிக்கு அனுப்பிவிட்டு, சிறுவர் விடுதியில் கொடூரமான பிரம்படிகள் வாங்கிய, சார்லி சாப்ளின் தான் பின்னர், 80 திரைப்படங்களில் நடித்து, படங்கள் தயாரித்து, அமெரிக்காவில் சொத்துக்கள் வாங்கி, ஹாலிவுட்டில் சொந்தமாக ஸ்டுடியோவும் உருவாக்கினார்.
வட்டத்தொப்பி, இறுக்கமான கீழ்வரை நீண்ட கோட்டு, கைத்தடி, தளர்ந்த முழுக்கை சட்டை, பெரிய மூடுகாலணிகள் என, தனக்கென்று ஒரு பிரத்யேக உடை அமைப்பையும், ஒப்பனையையும் புகுத்தி, தனக்கே உரித்தான உடல்மொழிகளால், தனித்தன்மையோடு தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர்.
பன்னிரண்டு வயதில், ‘ஷெர்லாக் ஹோம்ஸ்’ போன்ற நாடகங்களில் வாரக்கூலியில் நடித்த சாப்ளின், 25 வயதிலேயே புகழ் ஏணியின் உயரத்தை அடைந்து, படிப்படியாக உலகப்புகழ் கோடீஸ்வரரான கதை, படிக்கப் படிக்க வியக்க வைக்கிறது.
விஞ்ஞானி, ஐன்ஸ்டீன் தன் வீட்டுக்கு விருந்துக்கு வந்ததையும், அமெரிக்க அதிபர் வில்சன், வின்ஸ்டன் சர்ச்சில், சீனத் தலைவர் சூஎன்லாய், ஜவஹர்லால் நேரு, பெர்னார்ட் ஷா, பிகாஸோ போன்றோருடனான விருந்துகளையும், உலக அரசியல் வரலாறுகளுடனான தன் தொடர்புகளையும், பெருமிதமாகப் பகிர்ந்து கொள்கிறார்.
அதே நேரத்தில், பொதுவுடைமை சித்தாந்தங்களில் நாட்டமுள்ளவராக இருந்த சாப்ளின், மகாத்மா காந்தியின் மீது, தான் கொண்டிருந்த உயர்ந்த மதிப்பால், லண்டனுக்கு வந்த அவரை, தானே நேரில் சென்று, காத்திருந்து, பேசி மகிழ்ந்ததை நெகிழ்ந்து சொல்கிறார்.
கண்ணீரும், வெற்றி களும் நிறைந்த ஒரு உயர்ந்த கலைஞனின் வாழ்க்கையின் கண்ணாடி இந்நூல். அங்கங்கே சில முக்கிய சம்பவங்களுக்கு காலக்குறிப்புகளும், விரிவுகளும் இல்லாமலிருப்பினும், படிக்க வேண்டிய நூல் இது.
–மெய்ஞானி பிரபாகரபாபு