தமிழ் இலக்கிய உலகம் கடல் போன்று விரிந்து உள்ளது. அதில் முழுவதும் அறிவது என்பது இயலாத ஒன்றாகும். அம்முயற்சியில் இந்நூல் இறங்கி, ஓரளவு வெற்றி கண்டுள்ளது என்று கூறலாம்.
இந்நூலில், இலக்கணம், மொழியியல், சங்க இலக்கியம், இக்கால இலக்கியம், கலைகள், ஓரெழுத்து ஒருமொழிகள், தமிழ் நூல்கள் அடைமொழிகள், உரையாசிரியர்கள் என்று, 32 தலைப்புகளில் இன்றியமையாத விடைக்குறிப்புகள் உள்ளன.
அவையல் கிளவி என்பது இடக்கர் சொல் என்றும் (பக்.3), இரட்டுற மொழிதல் என்பதன் பொருள் சிலேடை என்றும் (பக்.7), சிற்றதிகாரம் என்று அழைக்கப்படும் நூல் நன்னுால் என்றும், (பக்.21), மயங்கொலி எழுத்துக்களின் எண்ணிக்கை, 8 என்றும், (பக்.41), திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ள உலக மொழிகளின் எண்ணிக்கை, 107 என்றும் (பக்.107), அஷ்டப்பிரபந்தத்தின் மறுபெயர், திவ்யபிரபந்த சாரம் என்றும் (பக்.159), கும்பகர்ணன் மனைவி வச்சிரசுவாலை என்றும் (பக்.292) இந்நூலால் அறிகிறோம்.
மேலும் இந்நூலில் சாகித்ய அகாடமி பரிசு பெற்ற நூல்கள், ஆசிரியர்களின் பட்டியலும், நூல்களும் அதன் ஆசிரியர்கள் என்ற பட்டியலும் மிக அருமையாக நூலாசிரியர் தொகுத்துள்ளார். இந்நூல், UGC, NET, SET, JRF ஆகிய தேர்வுகள் எழுத வழிகாட்டியாக இருக்கும் என்றும் கூறலாம். அனைவரும் படிக்க வேண்டிய பயனுள்ள நூல்.
– டாக்டர் கலியன் சம்பத்து