பலமுறை படித்தாலும் சலிக்காத- அலுக்காத- நூலாகத் திகழ்வது ராமாயணம் எனலாம். எத்தனை விதமான ராமாயணக் கதைகள் இருந்தாலும் அத்தனையும் கற்கண்டு தான். இந்நூலில், அபூர்வ ராமாயணத்திலிருந்து சில கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன.
ஊர்மிளை கேட்ட வரம் குறித்தும் (பக்.74), சீதைக்குப் பறவைகளின் மொழி தெரியும் என்பதும் (பக்.98), காக்கையாக வந்த ஜெயந்தன் செயலை நியாயப்படுத்துவதும் (பக்.102), ஊனமுற்றோரைக் கேலி செய்யக்கூடாது என்பதை, கபந்தன் நிகழ்ச்சி மூலம் விளக்குவதும் (பக்.113), சனி பகவானுக்குக் கால் ஊனமான விபரமும் (பக்.156), போரில் இறந்துவிட்ட ராவணன் உடலில் ஒவ்வொரு எலும்பிலும் ஒரு துளை இருப்பதன் காரணமும் (பக்:170) விளக்கப்பட்டுள்ளன.
ராஜா ராமனுக்கு உள்ள வேறுபாட்டை கூறியது நெருடலாக உள்ளது. அவற்றை தவிர்த்திருக்கலாம். ரோஸ் நிற உதடுகள் (பக்.13), கறாராக(பக்.22), என்ற சொற்களை, சிவப்பு நிற உதடுகள் என்றும், ‘உறுதியாக’ என்றும் எழுதியிருக்கலாம். ‘‘சென்று வா’’ (பக்15), ‘‘பறப்பதை’’(பக்.23), என்று பிழைநீக்கி இருக்கலாம். படிக்கச் சுவையாக உள்ள நூல்.
பேரா., டாக்டர் கலியன் சம்பத்து