ஆர்.முருகன், சிற்றிதழ்களின் பொற்காலத்தில் எழுத வந்தவர். ஒவ்வொரு சிறுகதைக்கும் முருகன் கையாளும் நடை, தேர்ந்த எழுத்தாளருக்கு உரியது. முதல் சிறுகதை, 1984ம் ஆண்டு கணையாழியில் வெளியானது.
மலையாளத்தில் இருந்து தமிழுக்குக் குறிப்பிடத்தக்க மொழிபெயர்ப்புகளை செய்துள்ளார். இவரது பல படைப்புகள், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளன.
கதா விருது, இலக்கியச் சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்கம் விருது, உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
இவரது கதைகளுக்குள் நிகழும் உரையாடல்கள், தனித்துவமான சிறிய உலகை உருவாக்கும் தன்மை கொண்டவை. மாய யதார்த்தம் என்பதை தமிழில் வெற்றிகரமாகக் கையாண்ட சொற்ப எழுத்தாளர்களில ஆர்.முருகன் முக்கியமானவர்.
இது இவரது, 10வது சிறுகதைத் தொகுதி. ‘குடம்’ என்ற கதையில், ஜவஹர்லால் நேருவின் மரணம், இந்தியத் திருநாட்டில் எங்கோ ஒரு மூலையில் எப்படி எதிர்கொள்ளப்பட்டது என்பதைச் சித்தரிக்கிறார். நேருஜி இறந்து, 30 ஆண்டுகள் கழித்துத் தான் இந்தக் கதை பதிவு செய்யப்பட்டது என்பதையும் ஆர்.முருகன் குறிப்பிடுகிறார்.
‘குவியம்’ என்று ஒரு கதை. குழலி ஒரு துணை நடிகை. அவள் வேசியாக ஒரு, ‘கிளாமர்’ காட்சியில் நடிப்பதை முருகன் பதிவு செய்கிறார்.
இயற்கை உபாதையைக் கழிக்க அவகாசம் கேட்டாலும், ‘ஷாட்’ முடிந்தபின் செல்லும்போது கழிப்பறைகள் எல்லாம் மூடிக் கிடக்கின்றன. படிப்பவர் கண்களில் நீர் திரளும் உணர்ச்சி மிகு தொகுப்பு!