சங்க காலம் தொட்டு, இன்றைய வரையிலான இலக்கியத் திறனாய்வியல், நாட்டுப்புறவியல், மானிடவியல், அறிவியல் தமிழ், விடுகதைக் கொள்கைகள், வருணனைகள், குறியீட்டியல் போன்றவற்றில் ஆழ்ந்து ஈடுபட்ட பின்னணியில் செறிவான, 11 கட்டுரைகளின் தொகுப்பாக இந்த நுால் உள்ளது.
நம்பிக்கையின் அடிப்படையில், கற்பனையில் உருவாகி, அதீத கற்பனையாக முடிவுறுகிற பழமரபுக்கதை எனப்படும் தொன்மத்தின் சொல் விளக்கம், தோற்றம், அமைப்புகள், பொருள் விளக்கங்கள், படிப்போர் மனதில் புதிய பார்வைகளை விளைவிக்கும்.
சைகையால் வளரத் துவங்கிய மொழி, பேச்சு வழக்காக வளர்ச்சியடைந்த காலம் தொட்டே தோன்றியதாக முன்வைக்கப்படும் தொல்கதைக்குத் தொன்மம் எனும் புதுமைச் சொல்லாக்கம் செய்தவர் தேவநேயப்பாவாணர் என்பது குறிப்பிடத்தக்கது.
சங்க இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், இதிகாசங்கள், காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள் ஆகியவற்றில் தொன்மங்களின் அடையாளங்களும் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன. தொன்மங்களின் தோற்றத்தைக் கிரேக்க தொல்கதைகளோடு ஒப்பிட்டு, தமிழ் மரபுகளின் தொன்மங்கள் விளக்கப்படுகின்றன.
பொது அறிவுக்காகவும், பொழுதுபோக்குக்காகவும் விடப்படும் விடுகதைகளின் தொன்மை, வரையறை, கருப்பொருட்கள், சூழல்கள், அமைப்புகள் ஆகியவற்றின் அடிப்படையிலான விடுகதைக் கோட்பாடு சிந்தனைக்குரியது.
மகாகவி பாரதியின் அறிவியல் தமிழ்ச் சிந்தனை உரைநடைகளிலிருந்து காட்டப்படும் மேற்கோள்களில், தமிழில் நுட்பமான அறிவியல் உண்மைகளைக் கற்றுக் கொடுக்கப் போதிய நுால்கள் வேண்டும் என்ற எண்ண வெளிப்பாட்டைப் புரிந்து கொள்ள முடிகிறது.
தமிழ், சமஸ்கிருதம், ஆங்கில மொழிகளில் சிறந்து விளங்கிய பாரதியின் எளிய மொழிபெயர்ப்புகள் பற்றிய அரிய விபரங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
பாரதிதாசனின் சமூகச் சீர்திருத்தக் கவிதைகளில் உள்ள அகப்பொருள் நுட்பச் சுவைகளும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. இலக்கியப் படைப்பாளிகள் படித்து ரசிக்கலாம்.