மிகவும் எளிய முறையில் அமைந்த, 31 கதைகள் இந்நுாலில் இடம்பெற்றிருக்கின்றன. இதில் உள்ள கதைகளான, ‘சிவராத்திரி விரதம் தோன்றியது; புறாக்கள் வழங்கிய படிப்பினை; கோவில் திருப்பணியில் மூன்று வகையானவர்கள்; எதற்கும் யோகம் வேண்டும்; சொர்க்கம் செல்லும் வழி; எல்லாவற்றிலும் உயர்ந்தது இறைவன் திருநாமங்கள்’ உள்ளிட்டவை, மக்களுக்கு எது உண்மையான நலனைத் தருமோ அதை விளக்குகின்றன.
மாணவச் செல்வங்களை சிரிக்க வைக்க வேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட கதைகள் அல்ல. மக்களின் உள்ளம் உயர வேண்டும் என்பதற்காக, ஓர் உயர்ந்த உண்மையை விளக்கும் வகையில், படிப்பவர்களின் மனதில் பசுமரத்தாணி போல் பதியும் வகையில் எழுதப்பட்டுள்ளது.
பார்வையற்ற ஒருவருக்கு ஊன்றுகோல் தேவைப்படுவது போல, மக்களுக்கு ஊன்றுகோலாக விளங்கி வழிகாட்டும் நீதிக் கதைகளைத் தந்துள்ளது. இந்நுாலில் பக்கத்திற்குப் பக்கம் இடம் பெற்றிருக்கும் படங்கள், நம் கண்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளன.
இந்நுாலில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்கள் விலை மதிப்பற்றவை. எல்லாரும் விரும்பிப் படிக்கக்கூடிய அருமையான நுால் என்று சொல்லலாம்!